என் மலர்tooltip icon

    ஈரோடு

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஈரோடு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பாசன பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் வேதனையில் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகளின் இந்த தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் சம்பவம் நடக்காமல் இருக்க விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகளின் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் துயர்களை போக்க மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

    அப்படி அமைக்கவில்லையென்றால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
    பவானியில் லாரியின் அடிபகுதியில் படுத்து தூங்கியவரை, டிரைவர் கவனிக்காமல் லாரியை எடுத்ததால் பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    பவானி பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). கூலித் தொழிலாளியான இவர் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அங்கு நடந்த சூரசம்கார விழாவை பார்த்து விட்டு கூடுதுறை அருகே வந்தார்.

    இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் பழனிச்சாமி அங்கு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் அதிகாலையில் அந்த லாரியின் டிரைவர் சச்சிதானந்தம் அங்கு வந்தார். அவர் லாரியின் அடிபகுதியில் பழனிச்சாமி தூங்கி கொண்டிருப்பதை பார்க்கவில்லை.

    லாரியை அவர் எடுத்தபோது அடிபகுதியில்  படுத்து தூங்கி கொண்டிருந்த பழனிச்சாமியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி நசுக்கியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பழனிச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆப்பக்கூடல் அருகே தீ விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். வீடுகளிலும் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் எரிந்து நாசமானது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள செட்டி குட்டை என்ற இடத்தில் சிலர் குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். இந்த குடிசைகளில் நேற்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தீ மள மள என்று பரவி அருகே இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த தீவிபத்தில் பெரியசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் மற்றும் இருளாயி ஆகியோரின் குடிசை எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்தின் போது வீட்டுக்குள் இருளாயி (வயது 80) தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவரது குடிசை வீட்டின் மேல் கூரை எரிந்து இருளாயி மீது விழுந்தது. இதனால் அதே இடத்தில் அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இந்த தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் எரிந்து நாசமானது. மேலும் டி.வி. பிரிட்ஜ். ரேசன் கார்டுகள் மற்றும் பல்வேறு பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

    சம்பவ இடத்துக்கு அந்தியூர் மற்றும் பவானி தீயணைப்புபடையினர் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    சிவகிரி அருகே மொபட்டில் சென்ற கணவன்-மனைவியிடம் கத்திமுனையில் நகை ,பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    ஈரோடு:

    சிவகிரிஅருகே உள்ள வ.கருக்கம் பாளையம் மாங்காடு புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்.விவசாயி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 55).

    இவர்களது உறவினர் குப்புசாமிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் அவரது வீட்டுக்கு மொபட்டில் ஜெகநாதன் தனது மனைவி சம்பூர்ணத்துடன் சென்றார்.

    அங்கு குழந்தையை பார்த்து விட்டு கணவன்- மனைவி இருவரும் தங்களது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    வீட்டின் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் இவர்கள் சென்ற போது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    இவர்கள் ஜெகநாதன் ஓட்டி சென்ற மொபட் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி மறித்தனர். இதை பார்த்த ஜெகநாதன் அவர்கள் வழி தெரியாமல் வந்து விட்டார்கள் என்று நினைத்து , நீங்கள் யாரப்பா? இந்த வழியாக செல்ல தடம் இல்லை. எனவே வேறு வழியாக செல்லுங்கள் என்று கூறினார்.

    ஆனால் அந்த வாலிபர்களோ திடீர் என்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகநாதனின் வயிறு அருகே வைத்தனர்.

    பிறகு அந்த ஆசாமிகள் ஒழுங்காக உங்களிடம் உள்ள நகை-பணத்தை கொடுத்து விடுங்கள்.இல்லை என்றால் கத்தியால் குத்திகொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    இதனால் ஜெகநாதனும், சம்பூர்ணமும் அதிர்ச்சி யடைந்தனர். வேறு வழியில்லாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து போன சம்பூர்ணம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க தாலி கொடியை கழற்றி மர்ம ஆசாமிகளிடம் கொடுத்தார். மேலும் கொள்ளையர்கள் மிரட்டியதால் ஜெகநாதன் தனது சட்டைப்பையில் வைத்திருந்த ரூ. 3 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார்.

    இதன்பிறகு ஜெகநாதன் வந்த மொபட்டின் சாவியை எடுத்து கொண்டு அந்த 2 மர்ம ஆசாமிகளும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய ஆசாமிகளுக்கு சுமார் 25 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை பறித்து சென்ற 2 ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்தசம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரேசன் அரிசி கடத்திய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    பவானி பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு லாரிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டிஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது பர்கூர் மலைப்பகுதியில் தட்டக்கரை அருகே வேகமாக வந்த 2 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த லாரியில் 30 டன் ரேசன் அரிசி இருப்பதும் இந்த அரிசி மூட்டைகள் கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

    இதையொட்டி அந்தியூர் ஜி.எஸ் காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37), பெருந்துறை கந்தாம் பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (29) மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் ஈஸ்வரன், சத்யராஜ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

    இதை ஏற்று இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், சத்யராஜ் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அகமது அலியின் கூட்டாளிகள்.

    சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி பிரிவில் தனியார் பனியன் நிறுவனம் செயல்படுகிறது .இங்கு இருந்து நேற்று இரவு பனியன் துணிகளை ஏற்றி கொண்டு திருப்பூருக்கு ஒரு லாரி சென்றது.

    இந்த லாரி சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் எல்லக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.

    ஒரு குறுகிய வளைவில் லாரியை டிரைவர் ஆனந்த் திருப்பினார் அப்போது நிலை தடுமாறிய லாரி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் திருப்பூர் போயம் பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்த் (வயது 30) என்பவர் லாரியின் அடியில் சிக்கினார்.

    இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி சுகப்பிரியா என்ற மனைவியும் 3 வயதில் யுவஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

    மேலும் லாரியில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    இது குறித்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோபி அருகே வேன் மோதி பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி, கொளப்பலூர் எல்.எம்.காலனியை சேர்ந்தவர் மோகன்(வயது47). பெயிண்டர். இவரது மனைவி பர்வதம்(வயது35).

    சம்பவத்தன்று மோகன் வேலை வி‌ஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோபி-குன்னத்தூர் ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத வகையில் மோகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் கார் மூலம் மோகனை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மோகனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    அரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து ஈரோடு ஜவான் பவன் முன்பு காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்த்தில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்கள் சரவணன், காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், பாட்சா, பவானி வட்டார தலைவர் பூபதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி அருகே சரக்கு வேன் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் ஈரோடு- கரூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகள் அமுதவள்ளி (வயது 56). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    அமுதவள்ளி அவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது30). வேன் டிரைவர். இவரது மனைவி மீனாட்சி(வயது28).

    இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகியுள்ளது.குழந்தை இல்லை. மீனாட்சி இருமுறை கருவுற்று கருசிதைவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர் மனவேதனையுடன் இருந்துள்ளார். அவரை பிரகாஷ் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீனாட்சி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். மாலையில் வேலையை முடித்து வீட்டுக்கு வந்த பிரகாஷ் மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர் வீடுகள் முழுவதும் மனைவியை தேடினார்.

    ஆனால் மீனாட்சி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரகாஷ் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

    தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மீனாட்சியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவ மழை தமிழ் நாட்டில் தொடங்கி பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டதை பொறுத்த வரை பலத்த மழை பெய்யா விட்டாலும் மிதமான மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் நேற்றும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.எலந்தகுட்டை மேட்டில் மட்டும் அதிகபட்சமாக 21 மி.மீட்டர் மழை கொட்டியது.

    மேலும் பெருந்துறை ஈரோடு, கவுந்தப்பாடி, சென்னிமலை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் ரோடுகளில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை வருவது போல் மேகமுட்டம் காணப்பட்டது.

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணையின் நீர் மட்டம் 45 அடியாக குறைந்து விட்டது.

    மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மீனவர் வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு சிலையும் சிக்கியது.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்த சிலையை வந்து பார்த்தனர். அது ஐம்பொன் நடராஜர் சிலை என தெரியவந்தது. அந்த சிலை சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

    பின்னர் மீனவர் செல்வராஜ் அந்த சிலையை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மீனவர் வலையில் சிக்கிய நடராஜர் சிலை தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டறிவார்கள். அதுவரை ஈரோடு சார்நிலை கருவூலத்தில் சிலை பாதுகாப்பாக வைக்கப்படும்’ என்றனர்.
    ×