என் மலர்tooltip icon

    ஈரோடு

    அ.தி.மு.க.வுக்கு தீபாவை தலைமை ஏற்க வைப்போம், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பேசியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய ஜெ.தீபா பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான மலரவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா தலைமையில் அ.தி.மு.க. வினர் ஒன்று திரள வேண்டும்.

    இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கைப்பற்றியே தீருவோம். 30 வருடத்துக்கு மேலாக அம்மாவுடன் இருந்தாராம் சசிகலா. அதனால் அவர் தான் முதல்வர் ஆக வேண்டும். என்கிறார்கள். ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது. தமிழக முதல்- அமைச்சராக சசிகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரை மட்டுமல்ல அவரது கூட்டத்தையும் விரட்டியடிப்போம்.

    தீபா விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரை நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். புரட்சிதலைவிக்கு பிறகு நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு மலரவன் கூறினார்.

    ரூ.10 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததால் புதுப்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் சேதுராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது33). சிறுவயதிலேயே இவரது தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இவரது அத்தை ராணி (59) பராமரிப்பில் பாபு வளர்ந்து வருகிறார்.

    ஈரோடு தில்லை நகரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அண்ணாமலை, சாந்தி ஆகியோரின் மகள் அருணா (27)வுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    அருணா ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமான பின்பு வேலைக்கு செல்ல வில்லையாம்.

    நேற்று காலை பாபு வங்கிக்கு சென்று விட்டார். மதியம் 2 மணியளவில் வீட்டில் பாபுவின் அத்தையும் அருணாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    நேற்று மாடிக்கு சென்ற அருணா மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தீ உடலில் பரவியதும் அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் பாபுவின் அத்தை ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அதே இடத்தில் அருணா உடல் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை கேள்விப் பட்டதும் ஆத்தூரில் உள்ள அருணாவின் பெற்றோர் அண்ணாமலை, சாந்தி மற்றும் உறவினர்கள் கதறியழுதபடி வந்தனர்.

    அவர்கள் வீட்டில் கருகிய நிலையில் கிடந்த மகளின் உடலை பார்த்து அழுது துடித்தனர். ‘‘எங்க பொண்ணை கொன்னுட்டாங்களே’’ என உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.

    இந்த நிலையில் அருணாவின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘கடந்த ஒரு மாதமாக என் மகளின் கணவர் பாபு மற்றும் அவரது அத்தையும் ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு வா என கேட்டு கொடுமை படுத்தினர். மேலும் வாஷிங்மிஷின் போன்ற பொருட்களையும் வங்கி வா என சித்ரவதை செய்தனர்.

    அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் எங்கள் மகள் இப்படி அநியாயமாக கருகி இறந்து விட்டாள். அவர்களை சும்மாவிடக் கூடாது. நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    இன்று காலை 10 மணி வரை அருணாவின் உடலை எடுக்கவில்லை. ஈரோடு ஆர்டிஓ நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக ஈரோடு டி.எஸ்.பி சம்பத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோபி அருகே பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கி கொண்டு இருந்த தொழிலாளி எதிர்பாராத தவறி விழுந்தார்.இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    கோபியை அடுத்த கடுக்காம்பாளையம், வஞ்சி மூப்பன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது55). பனை மரம் ஏறும் தொழிலாளி.

    சம்பவத்தன்று பழனிசாமி கடுக்காம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பழனிசாமி பனை மரத்தில் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பழனிசாமிக்கு பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்கிசிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் பழனிசாமியை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு அருகே செல்போன் ஷோரூம் ‌ஷட்டரை உடைத்து திருட முயன்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியை சேர்ந்தவர் காசி (வயது 36). இவர் ஈரோடு மூலப்பட்டறையில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காசி வழக்கம்போல் ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவில் அந்த வழியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது செல்போன் கடையின் பூட்டை ஒரு கும்பல் உடைத்துக்கொண்டு இருந்தது. உடனே போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோழிக்கோடு செம்மந்தோப்பு அம்பாயி ஹவுஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் ஆதர்ஸ் (வயது 21), திருச்சூரை அடுத்த குருவாயூர் அரணைதோட்டத்தை சேர்ந்த முகமது சாகத்தின் மகன் சாகில் (21), ஆலப்புழா மானார் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் நந்து (21), பத்தினம்திட்டாவை சேர்ந்த அகமதுசலாம் மகன் செம்மின்ஷா (21), பத்தினம்திட்டா பெருநாட்டை சேர்ந்த சுரேஷின் மகன் விஷ்ணு (20), கோழிக்கோடு நடுவழிவம் பகுதியை சேர்ந்த ராஜீவ் மகன் நித்தின் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் 6 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயர் கல்லூரியில் படித்து வருவதும், கல்லூரி விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்தவர்கள், ஈரோட்டில் உள்ள செல்போன் ஷோரூமில் திருட முயன்றதும் தெரியவந்து உள்ளது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் 6 பேரையும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அதில் 2 பேரை கோபி சிறையிலும் 4 பேரை பொள்ளாச்சி சிறையிலும் அடைத்தனர்.
    60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து வைக்க முயன்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி ஈரோடு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.
    ஈரோடு:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த 60-வது வயது முதியவர் ஒருவருக்கு 14 வயதே நிரம்பிய மாணவியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.

    அந்த மாணவி கூலித் தொழிலாளியான தனது தந்தை மற்றும் தாயாரிடம் இதுபற்றி கேட்டாள். நான் படிக்க வேண்டும் திருமணம் செய்ய மாட்டடேன் என்று கூறினாள்.

    எனினும் அதையும் மீறி 60 வயது முதியவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க உறுதியாக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தது.

    அந்த முதியவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து 3-ம் தாரமாக மாணவியை திருமணம் செய்ய ஆசையுடன் இருந்தார்.

    பெற்றோரின் திட்டத்தை முறியடிக்க அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறினாள். பஸ் ஏறி திருப்பூர் வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் எங்கு செல்வது? என்று தவித்து கொண்டிருந்தாள்.

    அந்த மாணவியை கவனித்த ஈரோடு தம்பதியினர் அவளிடம் விசாரித்தனர். அவள் விசயத்தை சொன்னாள்.

    உடனே அந்த தம்பதியினர் பரிதாபப்பட்டு மாணவியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பிறகு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஈரோடு “சைடு லைன்” அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையொட்டி அதன் இயக்குனர் அருண் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ் ஆகியோர் வந்து அந்த மாணவியிடம் விசாரித்தனர்.

    மாணவியோ நான் திருமணம் செய்து கொள்ள மாட்டடேன், படிக்க வேண்டும் என்றுகூறியபடி அழுதாள். பிறகு அவர்கள் மாணவியை ஈரோடு கொள்ளுகாட்டு வலசு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    காப்பகத்தில் அந்த மாணவியை பார்த்து கொள்வதாகவும் படிக்க வைப்பதாகவும் தெரிவித்தனர்.
    ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம்: தீபா பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம் என ஈரோட்டில் நடந்த தீபா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    ஜெ.தீபா பேரவையின் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூக்கடை சரவணக்குமார் தலைமை தாங்கி பேசினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமணி, மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருத்தணி முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜெ.தீபாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வண்ணம் அவருடைய சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்கி ஈரோடு மாவட்டத்துக்கு வரும்போது லட்சக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். ஜெ.தீபா பேரவையில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க அனைவரும் தீவிரமாக பணியாற்றவேண்டும்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டதை வெற்றிக்களம் ஆக்கிய மாணவ -மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜெ.தீபா பேரவை ஈரோடு மாவட்டத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த உண்மைகளையும், மரணத்தில் உள்ள மர்மங்களையும் வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம் இருண்டு கிடக்கும் தமிழகத்தை தீபா தலைமையில் ஒளியேற்றுவோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிறுவலூர் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென காணவில்லை. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    சிறுவலூர் அருகே உள்ள கடுக்காம் பாளையம் புளியங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜான் மெர்சி.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜான் மொசியை திடீர் என்று காணவில்லை. அவரை பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தொயவில்லை.

    இது பற்றி ஜான் மெர்சியின் தந்தை பெருமாள் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் காணாமல் போன தனது மகள் ஜான் மெர்சியை ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள ராஜ கோபால் என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் எனவே தனது மகளை மீட்டு கொடுக்கும்படியும் கூறி உள்ளார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஜான் மெர்சியையும், அவரை கடத்தியதாக கூறப்படும் ராஜகோபாலையும் தேடி வருகிறார்கள்.

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.சின்னசாமி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் மனோகர், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் லட்சுமணன், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    இதில் விலைவாசி பல மடங்கு அதிகரித்து இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 40 சதவீதம் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு காரணங்கள் கூறி நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தோடு மற்றும் லட்சுமி நகரில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் வரும் 7-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

    சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளியங்கராயன்பாளை யம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி, குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு,

    மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர். பாளையம், ராசாம் பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை மற்றும் பெருந்துறை சந்தை ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான (நகரியம்) வட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
    சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யப்பம் பாளைம் சத்ய சாய் நகரை சேர்ந்தவர் குமரேசன். (வயது 28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    இவரது மனைவி மகேஷ் (24), கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் வீட்டில் யாரும் இல்லாததால் குமரேசன் தினமும் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலையும் குமரேசன் தனது வீட்டை பூட்டி விட்டு  வேலைக்கு சென்று விட்டார். பிறகு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் நகையையும் காணவில்லை.

    குமரேசன் தினமும் தனது வீட்டை பூட்டி விட்டு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டில் பட்டப்பகலில் திருடி உள்ளது போலீஸ் விசராணையில் தெரியவந்தது.

    இது பற்றி  சத்தியமங்கலம் போலீசில் குமரேசன் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன் வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
    டி.என்.பாளையம் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    டி.என்.பாளையம்:

    கடம்பூரை அடுத்த கோட்டமாளம் காடுபசுவன்மாளம் அருகே உள்ள நீர்க்குண்டி புதூரை சேர்ந்தவர் சன்னத்தாயி(30).

    இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சதீஷ்,சஞ்சய் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சன்னத்தாயிக்கும் அவரது  அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும்  சன்னத்தாயை அவரது அம்மா திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சன்னத்தாய் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து குடித்தார்.

    இது குறித்து சன்னத்தாயி தனது தாயிடம்  நான் விஷம்  குடித்து விட்டதாக கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சன்னத்தாயை பரிசோதித்த டாக்டர்கள்  அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொடக்குறிச்சி அருகே வங்கி பெண் அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவரது மனைவி ராதாமணி (55).இவர்களது மகள் கிருத்திகா (31).

    மனோகரன் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். கிருத்திகா வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மான் குறிச்சி என்ற இடத்தை சேர்ந்த இவர்கள் சின்னியம்பாளையத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்தனர்.

    கிருத்திகாவுக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பல இடங்களில் பார்த்தனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபரை கிருத்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிச்சயதார்த்தம் நாளை மறுநாள் (6-ந்தேதி) நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகரன், அவரது மனைவி ராதாமணி, மகள் கிருத்திகா ஆகிய 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். இதன்பிறகு நேற்று காலை வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

    இதனால் இவர்களின் வீட்டுக்கு வழக்கமாக பால் ஊற்ற வரும் பால் வியாபாரி திரும்பி சென்று விட்டார். பிறகு மாலையில் மீண்டும் அவர் வந்த போதும் மனோகரனின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஈரோடு சாஸ்திரி நகரில் வசிக்கும் மனோகரனின் தம்பி அசோகனுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் வந்து பார்த்த போது மனோகரன் அவரது மனைவி ராதாமணி , இவர்களின் மகள் கிருத்திகா ஆகிய 3 பேரும் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதன்பிறகு அவர்களின் உடல்கள் பிரேத பாசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மனோகரன்,ராதாமணி, கிருத்திகா ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்னர்.

    இவர்களிடம் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மனோகரன் மற்றும் கிருத்திகா ஆகியோரின் செல்போன்களில் பதிவான போன் எண்களை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.

    மனோகரன் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

    கிருத்திகாவுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் இந்த சம்பவம் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது பற்றி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×