என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு நல்லித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நிவேதா (வயது17). நிவேதா ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நிவேதா கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி கல்லூரி போனவர் வீடு திரும்பவில்லை. அவரை தோழிகள் வீடுகளிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அக்ரகாரத்தில் உள்ள ஒரு வேன் டிரைவர், அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாணவி நிவேதாவின், தந்தை சதீஷ் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘என்மகளை வேன் டிரைவர் கடத்தி சென்றிருக்கக்கூடும் என சந்தேகப்படுகிறோம். அவரிடமிருந்து என்மகளை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    ஈரோட்டில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசு, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சதீஷ்(வயது23). இவரது மனைவி திவ்யபாராதி. சதீஷ் அக்காவின் திருமணத்திற்காக தனது அப்பாவின் பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்.

    வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மன வேதனையில் இருந்தார். அவருக்கு அவரது மனைவி திவ்யபாரதி ஆறுதல் கூறி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ் தனது மனைவி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு அருகே புதுப்பட சி.டி.க்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முனிசிபல் காலனியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட சி.டி.கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையொட்டிஈரோடு பெரியவலசு, கொங்குநகரை சேர்ந்த மாதேஷ்(வயது21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து மணல்கயிறு, அதே கண்கள், பலம், சிவப்பு எனக்கு பிடிக்கும், போன்ற புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போன்று மற்றொரு கடையில் நடந்த சோதனனயிலும் புதுப்பட சி.டி,க்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக சம்பத் நகரை சுரேஷ்குமார்(24), என்பவரையும் வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பு.புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பு.புளியம்பட்டி:

    செங்கோட்டையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ் இன்று (சனிக்கிழமை)அதிகாலை 4 மணி அளவில் பு.புளியம்பட்டி அருகே உள்ள காளி பாளையம் அருகே வந்தது.

    இங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது . கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகால் இருந்து திருப்பூருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற இந்த லாரியில் திடீர் என்று டீசல் தீர்ந்து விட்டது.

    இதனால் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டீசல் வாங்குவதற்காக சென்று விட்டார்.

    இந்த லாரி மீது செங்கோட்டையில் இருந்து வந்த அரசுபஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி உடைந்து பஸ்சும் சேதம் அடைந்தது,

    இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் கோபியைசேர்ந்த ரவிக்குமார், பு.புளியம்பட்டியை சேர்ந்த கண்டக்டர் கோபால் ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மற்றும் பஸ்சில் பயணம் செய்த சுமதி (வயது 29), நந்தினி (25) பூப்பாண்டி, முனியாண்டி, பாண்டியன், காளிதாஸ் பேச்சிமுத்து, மகாராஜன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் என கோபி மற்றும் ஈரோடு எம்.எல்.ஏ.க்கள் ஆன கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கே.வி. ராமலிங்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கோபி:

    கோபி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கே.ஏ. செங்கோட்டையன். முன்னாள் அமைச்சரான இவர் கோபி தொகுதி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இதனால் அவர் தொடர்ந்து கோபி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வருகிறார்.

    சமீபத்தில் நடந்த சட்டசபை தொகுதியிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவினால் கட்சியில் இருந்து செங்கோட்டையன் ஓரம் கட்டப்பட்டதாக அ.தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் திடீர் என்று ஜெயலலிதா இறந்தார். இதன் பிறகு சசிகலாவின் தலைமையை ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான செங்கோட்டையன் ஏற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் சசிகலாவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன் இப்போது அவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ளார். இதனால் அவருக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இப்போது முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. சசிகலா முதல்-அமைச்சர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள பன்னீர் செல்வம் தனக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். எனவே நான் தொடர்ந்து முதல் அமைச்சராக இருப்பேன் என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தொவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் செங்கோட்டையனுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

    அதில் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்ததால் உங்களுக்கு கோபி தொகுதியில் வசிக்கும் நாங்கள் தொடர்ந்து ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்தோம்.

    ஆனால் இப்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு சசிகலாவை ஆதரிப்பதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவால் முதல் அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்தை தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

    சசிகலாவை ஆதரிக்க கட்டாயம் இருப்பின் மீண்டும் எங்களிடம் வாக்கு கேட்டு வராதீர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதே போல ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி. ராமலிங்கத்துக்கும் பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி உள்ளனர்.

    அதில் வாக்களித்த எங்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாத வேறு ஒருவருக்கு முதல் அமைச்சராக ஆதரவு அளிப்பது ஏன்? அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
    பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று அமைச்சர் கருப்பணனுக்கு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈ ரோடு மாவட்டம் பவானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன் இவருக்கும் அத்தொகுதி மக்கள் பலர் ‘வாட்ஸ்-ஆப்’பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில்,

    “அம்மாவுக்காக அம்மா முதலமைச்சராக தொகுதி மக்களாகிய நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால் இப்போது நீங்கள் அதை மறந்துவிட்டு கட்சிக்கு சம்பந்தமில்லாத சசிகலாவை ஆதரிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?

    இதன் மூலம் நீங்கள் அமைச்சர் மட்டும் அல்ல எம்.எல்.ஏ தகுதியையும் இழந்து விட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த வாக்குகளை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். ஆகவே உடனே ராஜினாமா செய்யுங்கள்” என்று கூறியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவிலான சென்னிமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவிலான சென்னிமலையிலும் தைப்பூச விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெற்று வருகிறது.

    நாள் தோறும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாகனங்களில் காட்சி அளித்து அருள்பாலித்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வியாழக்கிழமை வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று காலை 6.11 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. தேர்நிலையை சாமி 6. 32 க்கு வந்தடைந்தது.

    பின் உற்சவ மூர்த்திகள் தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து சாமியை காலை 6.41 க்கு மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர். முதல் தேரில் விநயாகப்பெருமானும், பெரிய தேரில் முருப்பெருமான் அமர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினாதர் அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்று சுவாமி தரிசனம் நடந்தது.

    இதை அடுத்து காலை 6.43 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., நர்மாததேவி, ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.

    அப்போது அவர்கள் கந்தனுக்கு ‘அரஹரா அரஹரா ’ முருகனுக்கு ‘அரஹரா அரஹரா ’ என்று பக்தி கோ‌ஷம் எழுப்பினர். வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
    அம்மாபேட்டை அருகே பருத்தி பயிர் கருகியதால் மாரடைப்பில் விவசாயி மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் கலர்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). விவசாயி.

    இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். கடும் வறட்சியால் பருத்தி கருக தொடங்கியது. இதனால் தனது நிலத்தில் 900 அடிவரை போர் தோண்டினார். அப்படி இருந்தும் போரில் தண்ணீர் இல்லை. இதற்கிடையே பருத்தி பயிர்கள் முற்றிலும் கருகி விட்டது.

    இதனால் ராஜேந்திரன் மிகவும் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு அவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரது மனைவி சாந்தி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்சு வேனில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோட்டில் கடை அதிபர் மனைவி மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு என்.ஜி. ஜி.ஓ.காலனியில் உள்ள உழவன் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன்(வயது53). ஜவுளிவியாபாரி. இவரது மனைவி மாலதி(47). இவர்களுக்கு கீர்த்தனா(19) என்ற மகள் உள்ளார்.

    ரவிசந்திரன் ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். கீர்த்தனா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் தூங்க சென்று விட்டனர்.

    இன்று காலை மாலதி வீட்டுக்கு அவரது தங்கை கணவர் வந்தார். வீட்டு கதவு தாழ்பாள் போடாமல் பாதி பூட்டிய நிலையில் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் சென்று பார்த்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது. வீட்டின் படுக்கை அறையில் ரவிசந்திரனும், மாலதியும், கீர்த்தனாவும் இறந்து கிடந்தனர்.

    இது குறித்து அவர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவிசந்திரன், மாலதி, கீர்த்தனா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்று உடனடியாக தெரியவில்லை. ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரவிசந்திரன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனரா? என்று தெரியவில்லை.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரவிசந்திரன் உறவினர்கள் திரண்டு அழுத காட்சி பார்ப்போரை பரிதாப பட வைத்தது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அ.தி.மு.க.வை காக்க பன்னீர்செல்வமும்-தீபாவும் இணைந்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கிட்டுசாமி கூறியுள்ளார்.
    ஈரோடு:

    அ,தி.மு.க.பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

    ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.வான ஆர்.என்.கிட்டுசாமி நேற்று திடீரென சென்னை சென்று முதல்- அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    அப்போது கிட்டுசாமி கூறும்போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் என்னைப் போல் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இப்போது உள்ள எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர்.

    ஆனால் மிரட்டல் காரணமாக அவர்கள் வெளிப்படையாக சொல்ல தவித்து கொண்டிருக்கிறார்கள்’’ என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, ‘‘போயஸ் கார்டனை விட்டு சசிகலா உடனடியாக வெளியேற வேண்டும்.முதல்-அமைச்சர் பன்னீர் செல்வமும், தீபாவும் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.கட்சியையும் தொண்டர்களையும் காத்து வழி நடத்தி செல்ல வேண்டும்’’ என்று கூறினார்.
    பவானி அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அடுத்த தொட்டிபாளையம் கிராமம், மோளகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58).தொழிலாளி.

    துரைசாமிக்கு எலப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் துரைசாமி மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (வி‌ஷம்) குடித்து வாந்தி எடுத்தார்.

    அருகில் உள்ளவர்கள் துரைசாமியை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு துரைசாமியை கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார்.

    பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதரமாக விளங்கி வருவது பவானிசாகர் அணை. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பட்டு வந்தன.

    ஆனால் இந்த ஆண்டோ பருவமழை பொய்த்து விட்டதால் எதிர்பார்த்த அளவு கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள் காய்ந்து வருகிறது. தண்ணீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி போய் விட்டன.

    பவானிசாகர் அணையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து மிகமிக குறைந்து விட்டது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரமாக 45 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 42.50 அடியாக உள்ளது. பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே இப்படி என்றால் இனி போகப்போக என்னவாகுமோ... என பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இப்போது பகலில் வெயிலின் காட்டம் அதிகம் உள்ளது. இந்த வெப்ப சலனத்தால் இந்த ஆண்டு கோடை மழை கைக்கொடுக்குமா? என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர் மக்கள்.
    ×