search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யாதீர்கள்: செங்கோட்டையன்- கே.வி .ராமலிங்கத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யாதீர்கள்: செங்கோட்டையன்- கே.வி .ராமலிங்கத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் என கோபி மற்றும் ஈரோடு எம்.எல்.ஏ.க்கள் ஆன கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கே.வி. ராமலிங்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கோபி:

    கோபி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கே.ஏ. செங்கோட்டையன். முன்னாள் அமைச்சரான இவர் கோபி தொகுதி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இதனால் அவர் தொடர்ந்து கோபி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வருகிறார்.

    சமீபத்தில் நடந்த சட்டசபை தொகுதியிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவினால் கட்சியில் இருந்து செங்கோட்டையன் ஓரம் கட்டப்பட்டதாக அ.தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் திடீர் என்று ஜெயலலிதா இறந்தார். இதன் பிறகு சசிகலாவின் தலைமையை ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான செங்கோட்டையன் ஏற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் சசிகலாவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன் இப்போது அவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ளார். இதனால் அவருக்கு அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இப்போது முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. சசிகலா முதல்-அமைச்சர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள பன்னீர் செல்வம் தனக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். எனவே நான் தொடர்ந்து முதல் அமைச்சராக இருப்பேன் என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தொவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் செங்கோட்டையனுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

    அதில் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்ததால் உங்களுக்கு கோபி தொகுதியில் வசிக்கும் நாங்கள் தொடர்ந்து ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்தோம்.

    ஆனால் இப்போது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு சசிகலாவை ஆதரிப்பதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவால் முதல் அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்தை தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

    சசிகலாவை ஆதரிக்க கட்டாயம் இருப்பின் மீண்டும் எங்களிடம் வாக்கு கேட்டு வராதீர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதே போல ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி. ராமலிங்கத்துக்கும் பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி உள்ளனர்.

    அதில் வாக்களித்த எங்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாத வேறு ஒருவருக்கு முதல் அமைச்சராக ஆதரவு அளிப்பது ஏன்? அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×