என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்
- ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது.
- நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு,
மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 2025-ம் வருடத்திற்குள் தொழுநோய் பரவலை முற்றிலும் ஒழித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 2-ம் நிலை ஊனத்துடன் புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பவானி, சத்தியமங்கலம் மற்றும் சென்னிமலை ஆகிய வட்டாரங்களில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 460 முன்களப்பணியாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளார்கள்.
இவர்கள் வீடு, வீடாக நேரில் சென்று ஆண்களை ஆண் முன்களப்பணியாளர்களும், பெண்களை பெண் களப்பணியாளர்களும் தொழுநோய்க்கான பரிசோதனை செய்ய உள்ளார்கள். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் ெகாள்ளப்படுகிறார்கள். தொழுநோய் ஆரம்ப அறிகுறிகளான தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு மற்றும் குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு முடிச்சாக காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து நோயின் தன்மைக்கேற்ப 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாக குணப்படுத்தவும், ஊனங்களை தடுக்கவும் முடியும். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்பவர்கள், அருகில் வசிப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். இதனால் மற்றவர்களுக்கு தொழுநோய் பரவாமல் தடுக்க முடியும். இந்த தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.






