என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதைப்பண்ணைகளில் விதைச்சான்று இயக்குனர் ஆய்வு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் ஏஎஸ்டி16, டிபிஎஸ் 5, எம்டியு1010, ஏடி37, கோ51, ஜோதி ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விதைப்பண்ணை பயிரானது தற்போது பூப்பருவம் மற்றும் அறுவடை பருவத்தில் உள்ளது.
இவ்விதைப்பண்ணைகளை ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் எஸ்.மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியின்போது விதைப்பயிர் நடவுமுறை, கலவன்கள் அகற்றும் முறை, பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் பற்றி கூறினார்.
மேலும் இந்த பருவத்தில் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தும் பயிர்பாதுகாப்பு முறைகளை பற்றி கூறினார்.
இப்பயிற்சியின்போது ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் டி.என்.பாளையம் வட்டார உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர்.






