என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
- மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
- புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.