search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைக்காமல் கரை அமைக்க வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
    X

    பக்கிங்காம் கால்வாயில் அகலமாக அமைக்கப்பட்டுள்ள கரையினை படத்தில் காணலாம்.

    மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைக்காமல் கரை அமைக்க வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

    • பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கந்தாடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள முதலியார்பேட்டை கிராமத்திற்கும் காக்கா பள்ளம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அரசு ரூ.161 கோடி ஒதுக்கி கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. தடுப்பனையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலால் கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, மணல் கரை அமைக்கும் பகுதியில் முதலியார்பேட்டை, பச்சைபைத்தான் கொள்ளை, புதுப்பாக்கம், திருக்கனூர் தேவிகுளம், வண்டிபாளையம், வடகரம், ஆத்திகுப்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கள் விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களின் பாசன வசதிக்காவே அணை கட்டப்பட்டது. மேலும், பக்கிங்காம் கால்வாயின் இருபுறமும் கரை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் இந்த அணையை கட்டும் ஒப்பந்ததாரர்கள் பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைத்து இரண்டு புறமும் மணல் சுவர்களை அமைத்து வருகின்றனர். கால்வாயின் அகலத்தை குறைப்பதால், பருவ மழை காலத்தில் வெள்ள நீரானது, கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் கால்வாய்க்கு செல்லும் வழியையும் ஒப்பந்ததாரர்கள் அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர் வெளியேறவும் வழியில்லாமல் உள்ளது. விளை நிலங்களில் உள்ள பயிர்கள் மட்டுமின்றி, வீடுகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைக்காமல் மணல் சுவர் அமைக்க வேண்டும். கிராமங்களில் இருந்து மழைநீர் வெளியேறும் வழியை திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×