search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதால் எலெக்ட்ரீசியன் தற்கொலை
    X

    பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதால் எலெக்ட்ரீசியன் தற்கொலை

    • அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார்.
    • அஸ்மா அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், மாவெலிபாளையம் குட்டகாட்டைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு கவுதம், விக்னேஷ் என்ற 2 மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர். கவுதம், காவியா இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகன் விக்னேஷ் (25) எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், விக்னேஷ்க்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து, ஏத்தாப்பூர் உத்தரகாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். வருகின்ற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் விக்னேஷ், சங்ககிரியில் வசிக்கும் திருநங்கையான அஸ்மா என்பவர் வீட்டில் எலெக்ட்ரீசியன் வேலை செய்தபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார். அங்கு இருவரும் போட்டோ எடுத்துள்ளனர்.

    அப்போது விக்னேஷ், தனக்கு நிச்சயம் செய்த பெண்ணின் போட்டோவை அஸ்மாவிடம் காட்டியுள்ளார்.

    அதற்கு அஸ்மா, நீ அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் விக்னேஷின் வீட்டுக்கு வந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளோம், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி டார்ச்சர் செய்ததாக தெரிகிறது. மேலும் விக்னேஷுக்கு நிச்சயமான பெண்ணின் செல்போன் நம்பருக்கு விக்னேஷ் உடன் ஜோடியாக உள்ள போட்டோவை அனுப்பி, நான் தான் விக்னேஷை திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் விக்னேஷ் வீட்டிற்கு வந்து விக்னேஷ், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்த போட்டோவை காட்டி திருமண நிச்சயத்தை நிறுத்தி விட்டனர்.

    இதனால் மனமுடைந்த விக்னேஷ், தனது உறவினர் வீடான பரமேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை கீழே இறக்கி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

    Next Story
    ×