search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது: 4 பேர் உடல் கருகினர்
    X

    20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது: 4 பேர் உடல் கருகினர்

    • மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை அடுத்த துர்கா நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தன. அடுத்தடுத்து சுமார் 20- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கோலாகியம்மாள் (53) என்பவரது வீட்டிலும் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கோலாகியம்மாள், ஏழு மாத கர்பிணியான சித்ரா(30), இரண்டு மாத குழந்தையான அஜய்குமார், 4 வயது சிறுவன் ரோஹித் ஆகியோர் மீது மின்வயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு உடல் லேசாக கருகியது. மேலும் மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். மின்ஊழியர்கள் உயர்மின் அழுத்தத்தை சரிசெய்தனர். வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×