என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் எடப்பாடி பழனிசாமி பயணம்- பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்
- தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் சென்னை-கோவை இடையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார்
சென்னை:
தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் சென்னை-கோவை இடையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சேலம், கோவை, திருப்பூர் பகுதியை சுற்றியுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், ஐ.டி.கம்பெனி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த ரெயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் வந்தே பாரத் ரெயில் சென்றடையும் என்பதால் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார். சிறப்பு வகுப்பு பிரிவில் பயணம் செய்த அவருடன் சக பயணிகள் பலரும் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
காலை 11.40 மணி அளவில் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






