search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்விக்கடன் சான்று பெற வசதியாக கல்லூரி வளாகத்தில் இ-சேவை மையங்கள்
    X

    கல்விக்கடன் சான்று பெற வசதியாக கல்லூரி வளாகத்தில் இ-சேவை மையங்கள்

    • கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்று, பான்கார்டு சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் மூலம் கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்ய நடவடிக்கை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்திலும், 18-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக் கழகத்திலும் கல்வி கடன் முகாம்கள் நடந்து ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    மேலும் வருகிற 22-ந் தேதி அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 26-ந் தேதி அன்று பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 29-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவ- மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்றுகள் மற்றும் பான்கார்டு ஆகிய சேவைகளை பெற நாளை (4-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கல்விக்கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளம் அறை எண்-16-ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் அனைவரும் நாளை முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கல்நது கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×