search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள்- பேரூராட்சிகள் இயக்குனர் நேரடி ஆய்வு
    X

    கோத்தகிரி பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள்- பேரூராட்சிகள் இயக்குனர் நேரடி ஆய்வு

    • கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்
    • நேரு பூங்காவில் விரிவாக்க பணிகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

    அரவேணு,

    தமிழக பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.42 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு பதிக்கப்பட உள்ள குடிநீர் குழாய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சக்தி மலையில் குடிநீர் தொட்டி அமைவிடத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து கோத்தகிரியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் நேரு பூங்காவுக்கு சென்ற பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் அங்காடியை பார்வையிட்டார். அப்போது அங்கு தெளிப்பு உரங்கள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, கோத்தகிரியில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் திறம்பட செய்ய வேண்டும், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கோத்தகிரி நேரு பூங்காவில் இன்னும் விரிவாக்க பணிகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பேரூராட்சி இணை இயக்குனர் இப்ராஹிம்ஷா, பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×