search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி 18 பண்டிகை கோலாகலம் சேலம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    சேலம் நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் திருக்கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மன். அஸ்தம்பட்டி அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள பூட்டு முனியப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆடி 18 பண்டிகை கோலாகலம் சேலம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

    • ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி வெள்ளி மற்றும் ஆடி 18 என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விசேஷங்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
    • மாமாங்கம் செயற்கை நீரூற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

    சேலம்:

    சேலத்தில் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி வெள்ளி மற்றும் ஆடி 18 என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு விசேஷங்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாநகரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதேபோல் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அம்மன் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரிசிபாளையம் நாராயணசாமிபுரத்தில் உள்ள ஓம்சக்தி காளியம்மனுக்கு ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாப் பேட்டை பலபட்டறை மாரியம்மன், மற்றும் சஞ்சீவராயன்பேட்டை உள்ளிட்ட நகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    சேலம் உடையாப் பட்டியில் கந்தாஸ்ரமம் கோவிலில் உள்ள முருகன், துர்கா பரமேஸ்வரி ஆகிய சன்னதிகளில் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் அய்யந்திருமாளிகை ஆலங்கொட்டை பூட்டு முனியப்பன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பூட்டு முனியப்பனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.

    இதையடுத்து ஆத்துகாடு, ஜல்லிக்காடு, கோரிமேடு, கள்ளிக்காடு, கம்பர் தெரு, வீட்டுவசதி வாரியம், ராமசாமிநகர், ராமநாதபுரம், சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி, பெரிய கொல்லப்பட்டி, பள்ளக்காடு, மணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக வந்திருந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

    சேலம் குகை மாரியம்மன், மற்றும் காளியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்கள், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே திரளான பெண்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    அதேபோல் ஆடி 18-ஐ முன்னிட்டு சேலம் மாமாங்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து சாமியை கொண்டு வந்து சுத்தம் செய்தனர். பின்னர், அனைத்து சாமி சிலைகளுக்கும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பக்தர்கள் மாமாங்கம் செயற்கை நீரூற்றில் புனித நீராடினார்கள். அங்குள்ள ஊற்றுகிணறு முனியப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஜாகீர் அம்மாபாளையம், காமநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, பழையூர், செங்கானூர், கொல்லப்பட்டி, திருமலைகிரி, சோளம்பள்ளம், குள்ளகவுண்டனூர், சூரமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து புனித நீராடினார்கள். இதே போல் சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்திலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    Next Story
    ×