என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடுஹட்டி ஊராட்சியில் ரூ.1.72 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள்- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
- ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
- ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.
கோவை,
நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுஹட்டி ஊராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினையும், கெங்கரை ஊராட்சி பிக்கட்டி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் 2021-2022 -ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாண்டியன் நகர் மற்றும் குண்டுபெட் காலனி பகுதியில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடமும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் கல்லட்டி சாலை பணிகள், ரூ.5 லட்சம் மதிப்பில் பையங்கியில் சமையற் கூடத்தினையும், கட்டபெட்டு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கலர்செட், பெப்பேனில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமையற்கூடத்தினையும் மற்றும் இதர திட்டங்களாக 39 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டிற்கு 16 பணிகள் ரூ.59 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் இரண்டு ஆண்டுகளில் இவ்வூராட்சி பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், கோத்தகிரி பேரூராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த ஆண்டு ரூ.46 லட்சமும், நடப்பு ஆண்டில் ரூ50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், நடுஹட்டி ஊராட்சியில் 14 -வது மத்திய மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அருகில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு சுவர், கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ், குரூஸ்லி முதல் குண்டுபெட் பிரிவு வரை ரூ.96.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹிம்சா கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தன், அனிதா, கோத்தகிரி பேரூராட்சி (செயல் அலுவலர்) மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ஊராட்சித்தலைவர்கள் கிருஷ்ணன் (நடுஹட்டி), முருகன்(கெங்கரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.






