search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சி- நோய்களிலிருந்து தென்னை பயிரை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
    X

    மருங்குளத்தில் விவசாயிகளுக்கு, அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    பூச்சி- நோய்களிலிருந்து தென்னை பயிரை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

    • பல்வேறு பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல்களை கண்காணித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தண்ணீருடன் மைதா கலந்து பீய்ச்சி அடித்தல் ஆகியன விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாரம் மருங்குளம் கோபால் நகரில் விவசாயிகளுக்கு தென்னை பயிரினை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் வயலாய்வு பயிற்சி வேளாண்மை- உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகம் இணைந்து நடத்தப்பட்டது.

    உழவர் அலுவலர் தொடர்பும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் நியமிக்கப்பட்டு

    வேளாண்மை துறை அலுவலர்களுடன் இணைந்து, பல்வேறு பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல்களை கண்காணித்து, உரிய பரிந்துரை மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக மருங்குளம் கிராமத்தில் தென்னை மரங்களில் பூச்சி நோய் கண்காணிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பயிற்சியில் மருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் வேலாயுதம் மற்றும் உழவியல் துறை இணைப்பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து , உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆலோசகர் இளஞ்செழியன், வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    தென்னையில் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு தாக்குதல், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய்களின் உழவியல் மற்றும் உயிரியல் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகியவை விளக்கப்பட்டது. மஞ்சள் நிற ஒட்டும் பொறி, விளக்கு பொறி, ஆமணக்கு புண்ணாக்கு வைத்து பூச்சிகளை கவர்ந்து அழித்தல், விசைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்துதல், தண்ணீருடன் மைதா கலந்து பீய்ச்சி அடித்தல் ஆகியன விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும் உயிரியல் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் மூலம் பூச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் முறைகள் பயிற்சியளிக்கப்பட்டது.

    மேலும், தென்னையில் சமச்சீரான உர மேலாண்மை மற்றும் தென்னை நுண்ணூட்ட கலவை பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. போர்டோ கலவை தயாரிப்பது குறித்தும் எருக்குழியில் மெட்டாரைசியம் உயிர் பூசனம் இடுதல் மற்றும் வேர் மூலம் தென்னை டானிக் எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் பழனி மற்றும் அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×