search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயோ மைனிங் முறையில் மின்சாரம், கியாஸ், உரம் தயாரிக்க முடிவு: கொடுங்கையூர் குப்பை கிடங்கை பசுமையாக மாற்ற திட்டம்
    X

    தண்டையார் பேட்டையில் நடந்த கருத்து கேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

    பயோ மைனிங் முறையில் மின்சாரம், கியாஸ், உரம் தயாரிக்க முடிவு: கொடுங்கையூர் குப்பை கிடங்கை பசுமையாக மாற்ற திட்டம்

    • ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
    • ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

    இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் கிடங்கில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்படுகிறது. 1 முதல் 8 மண்டலங்களில் உள்ள குப்பைகளை இங்கே கொண்டுவரப்படுகின்றன. இதனால் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை குவிந்து கிடக்கின்றன. குப்பையில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவு வெளியேறுவதால் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில். இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு, 7 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீ விபத்தை தடுப்பதற்காக முன்எச்சரிக்கையாக இரண்டு குடிநீர் லாரிகள், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

    குப்பைகளை பொறுக்கும் நபர்கள் இரும்பு, செம்பு கம்பிகளை எடுப்பதற்காக வயர்கள் உள்ளிட்ட பொருட்களை அவ்வபோது குப்பைகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மர்ம நபர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    இதே போல் குப்பை கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் `ப்ளோரசன்ட்' பல்புகளில் இருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசிப்பதால் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றது. குப்பைகளில் இருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்' வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட 20 மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப டுகிறது. இதை தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதி நிலத்தை பசுமையாக மாற்றுவதற்கான முயற்சியாக குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    இந்த திட்டம் 6 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு பணிகளை மேற்கொள்ளும் போது சிறந்த முறையில் செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்ட பணி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 2025-ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் படி குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம், கியாஸ், உரம் தாயரிக்கப்படும். இதற்காக திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைந்த செயலாக்க நிலையங்கள் அமைய உள்ளன.

    இதற்கிடையே கொடுங்கையூர் குப்பை கிடங்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பயோ மைனிங் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தண்டையார் பேட்டையில் உள்ள காலரா தொற்று நோய் ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்கத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் அவர்கள் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டு எடுப்பதற்கான அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேஸ்வரன், தலைமையில், ஆர்.கே.நகர் ஜே.ஜே. எபினேசர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் இந்த திட்டம் குறித்து பேசும்போது இந்த திட்டம் சிறப்பானது ஆகும். இதை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது போல் தற்போதும் கிடப்பில் போடாமல் விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்தத் திட்டத்திற்காக ரூ. 648 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் மற்றும் மிகவும் நவீன வசதியுடன் கூடிய எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பணியானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2025-ம் ஆண்டுக்குள் முடித்து செயல்பாட்டிற்கு வரும். ஏற்கனவே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது என்றனர்.

    Next Story
    ×