என் மலர்tooltip icon

    கடலூர்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கார்த்திகை மாதமான இன்று சிறப்பு முகூர்த்த நாள் என்பதால் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    கடலூர்:

    கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது புதுவை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் நேர்ச்சையை செலுத்தலாம் என்பதால் பக்தர்கள் கூட்டத்துக்கு எப்போதும் குறைவிருக்காது.

    முகூர்த்த நாட்களில் தேவநாதசாமி கோவிலில் ஒரே நேரத்தில் அதிகம் திருமணங்கள் நடைபெறும். கார்த்திகை மாதமான இன்று சிறப்பு முகூர்த்த நாளாகும். இதையொட்டி இன்று தேவநாதசாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    50 ஜோடிகளின் உறவினர்களும் திருமணத்துக்கு வந்திருந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தியிருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்தனர்.
    கடலூரில், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 66). எலக்ட்ரீசியன். இவர் நேதாஜி சாலை விநாயகர் கோவில் எதிரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ராஜமாணிக்கம் பெட்ரோல் கேனுடன், அப்துல்காதர் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வீட்டு முன்பு சென்றார்.

    அங்கு திடீரென அவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததால், வலி தாங்க முடியாமல் ராஜமாணிக்கம் அலறி துடித்தார். பின்னர் அவர், ராஜேந்திரன் வீட்டு முன்பகுதியில் உள்ள கேட்டை திறந்து உள்ளே சென்றார். அதற்கு மேல் செல்ல முடியாமல், இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த இடம் அருகே எரியும் நெருப்புடன் கீழே விழுந்தார்.

    சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, ராஜமாணிக்கத்தின் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ராஜமாணிக்கம் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ராஜமாணிக்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சம்பவம் குறித்து ராஜமாணிக்கத்தின் மகன் வேல்முருகன், கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.

    அதில், தன்னுடைய தந்தை சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ராஜமாணிக்கம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தாழ்வு நிலையாக வலுவிழந்த நடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று வேகமாக வீசியது.
    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 29-ந் தேதி இலங்கைக்கு அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    அதைத்தொடர்ந்து மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது.

    இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த புதன்கிழமை புயலாக உருவானது. இதற்கு நடா புயல் என்று பெயரிடப்பட்டது. புயல் உருவானதையொட்டி தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    தென்மேற்கு வங்க கடலில் உருவான நடா புயலின் வேகத்தில் நேற்று காலையில் மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    கடலூர் அருகே புயல் கரையை கடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவை மாநிலம் காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை புயல் கரையை கடந்தது.

    இதையொட்டி காரைக்காலில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. காரைக்காலை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    புயல் இன்று காலை கரையை கடந்ததையொட்டி காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 38 பேர் வந்துள்ளனர். இதேபோல் கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் தாக்கியது. அப்போது லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து சேதமாகின. விளை நிலங்கள் நாசமானது. இந்த பாதிப்பை சீர் செய்ய ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது.

    கடந்த ஆண்டு (2015) நவம்பர் மாதம் 7-ந் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 9-ந் தேதி விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கொட்டித்தீர்த்த மழையினால் பண்ருட்டி பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பண்ருட்டி வீசூர் பகுதியில் 2 பேரும், பெரியக்காட்டுப்பாளை யத்தில் 9 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உருவான நடா புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனால் பொதுமக்களிடம் மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.

    புயல் பாதிப்பை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலூரில் முகாமிட்டு இருந்தனர். வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் அதிகாரிகள் கடலூரில் தங்கி இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். மீனவர்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று வேகமாக வீசியது. பெரிய அளவில் மழை ஏதும் இல்லை. கடலூரிலும் அதேபோல் லேசான காற்று மட்டுமே வீசியது. புயல் பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் தப்பியது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    ‘நடா’ புயல் பாதிப்பை தடுக்க கடலூரில் மீட்புக்குழு தயார் நிலையில் இருப்பதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரியும் வேளாண்மை துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி கூறினார்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ‘நடா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரியும் வேளாண்மை துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கினார்.

    கலெக்டர் ராஜேஷ், ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ககன்தீப்சிங் பேடி தானேபுயல் மற்றும் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் ‘நடா’ புயல் கரையை கடப்பதையொட்டி தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

    அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் வரவழைக்கப்பட்டு உள்ளது.

    மின்சாரத்துறை சார்பில் 2 தலைமை அதிகாரிகள் தலைமையில் 2 ஆயிரம் மின் ஊழியர்கள் மற்றும் 3 ஆயிரம் மின் கம்பங்கள் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் எங்கு மரம் முறிந்தாலும் உடனே அதை அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் தேக்கி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், ஓடைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

    கடந்த முறை வெள்ளப் பாதிப்பின் போது அதிகம் பாதித்த இடங்களை கண்டறிந்து உடனடியாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி உள்ள படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடா புயல் பாதிப்பை சமாளிக்க மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 76 பேர் இன்று கடலூர் வந்தனர். பேரிடர் மீட்புக்குழுவினர் 38 பேர் பரங்கிப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    கடலூர்:

    ‘நடா’ புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை 4.30 மணிக்கு கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த புயலை சமாளித்து, கடலூர் மாவட்ட பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் நடா புயலை சமா ளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 16 பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 30 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதில் 15 குழுவினர் தீயணைப்பு வீரர்களும், 10 குழுவில் போலீசாரும், 5 குழுவில் மீனவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    26 மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பணியில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து, குளோரின் கலந்து 2, 3 நாட்களுக்கு தேவையான தண்ணீரை நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 76 பேர் இன்று கடலூர் வந்தனர்.


    ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். 50 படகுகளும், அதில் மீட்பு பணிக்கு 120 பேரும் ஆயத்தமாக உள்ளனர். 100 மரம் அறுக்கும் கருவிகள், 3 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    1,000 மின் ஊழியர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்களுக்கு அருகே பொதுமக்கள் யாரும் நிற்க வேண்டாம்.

    830 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. புயலை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.



    வங்கக்கடலில் உருவான நடா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே, 780 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக வலுப்பெற்று உள்ளது. இதற்கு ‘‘நடா’’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த புயல் இன்று (வியாழக்கிழமை) இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் புதுச்சேரிக்கும்- வேதாரண்யத்துக்கும் இடையே கடலூர் அருகே கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான நடா புயல் காரணமாக நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு மேல் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    நடா புயல் காரணமாக கடலூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் நாளை 2-ந் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் கடலூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரத்தில் உள்ள மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே அமாவாசை வந்த நேரம் சரியில்லை, இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தை அடுத்து வரக்கால்பட்டு பகுதி உள்ளது. இங்கு நேற்று அமாவாசை வந்த நேரம் சரியில்லை, இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து மக்களிடையே பரவியது.

    இதையடுத்து அந்த பகுதி பெண்கள் அங்குள்ள கோவில் அர்ச்சகரிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் இந்த அமாவாசை வந்த நேரம் சரியில்லை, ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும்.

    இதற்கு பரிகாரமாக வீட்டிற்கு வெளியில் வாழை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதில் புதிய அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றால் போல் அகல் விளக்கேற்றி வழிபடலாம் என்று கூறினார்.

    மேலும் விளக்கேற்றிய போது பயன்படுத்திய வாழை இலை, பச்சரிசி, அகல் விளக்குகளை மறுநாள் காலையில் ஆறு, குளங்கள், கிணறு ஏதாவது ஒன்றில் விட வேண்டும் என்றும் கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதி பெண்கள் நேற்று மாலை தங்களது வீட்டின் முன்பு அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

    இதனால் அந்த பகுதி கார்த்திகை தீபம் ஏற்றியதுபோல் விளக்கொளியால் ஜொலித்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக கடலூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    கடலூர்:

    கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா(வயது 27). இவர் கடந்த ஆண்டு திருச்செங்கோட்டில் துணைபோலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் தான் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடலூருக்கு இன்று வந்தனர்.

    அவர்கள் கடலூர் கோண்டூர் பகுதியில் உள்ள விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த மத்திய அரசை கண்டித்து கடலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த மத்திய அரசை கண்டித்து கடலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

    மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, துரைசரவணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் தண்டபாணி, நகர துணை செய லாளர் ராமு, குருசரஸ்வதி, பாலகிருஷ்ணன், நிர்வாகி கள் கோவிந்தசாமி, வேல்முருகன், பொன் கணேஷ், ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன் முடி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ.சேதுநாதன், நகர செயலாளர் கபிலன் மற்றும் மாவட்ட, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அங்கையர் கண்ணி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    உளுந்தூர்பேட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு 3 சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். வாழும் போது பல அற்புதங்களை நிகழ்த்திய தோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது பண்ருட்டியை அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது கோவிலுக்கு கீழே அற்புதமான கட்டிட அமைப்புடன் நூற்றுக்கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள், தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்புத காட்சி கிடைத்தது.

    அங்கு அந்த பகுதியில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் 3 பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த 3 சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர்.

    இதற்கிடையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்தனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்து வருகின்றனர். இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    என்.எல்.சி. தெர்மல் முதல் அனல்மின் நிலையத்தில் ‘டிரிப்’ ஆகியதால், மின் உற்பத்தி பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்ப முடியாமல் போனதால் 8 மாவட்டங்கள் நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் திடீர் மின்தடை ஏற்பட்டது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 2,490 மெகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு. அங்கிருந்து தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்பும் மின்பாதையில் திருச்சிக்கும் அரியலூருக்கும் இடையே சிங்காரத்தோப்பு என்ற இடத்தில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது.

    இதனால் என்.எல்.சி. தெர்மல் முதல் அனல்மின் நிலையத்தில் ‘டிரிப்’ ஆகியதால், மின் உற்பத்தி பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது.

    இங்கிருந்து மத்திய மின் தொகுப்பு ஆய்வு மையத்துக்கு மின்சாரம் அனுப்ப முடியாமல் போனதால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 8 மாவட்டங்கள் நேற்று மாலை 5.45 மணிக்கு மேல் திடீர் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் நகரம் இருளில் மூழ்கியது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பஸ் நிலையங்களில் மக்கள் தவித்தனர்.

    இதையடுத்து என்.எல்.சி.தொழில்நுட்ப அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு பழுதை நீக்கினர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் இரவு 8.45 மணி முதல் படிப்படியாக மின்வினியோகம் தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அனைத்து மாவட்டங்களுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

    இந்த திடீர் கோளாறு எதனால் ஏற்பட்டது என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ×