என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே உளுந்துபயிர்கள் கருகியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
    விருத்தாசலம்:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாய பயிர்கள் கருகின. இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள் தற்கொலை செய்வது நீடித்து வருகிறது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கோபுராபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் (வயது 45). இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் உளுந்து பயிரிட்டிருந்தார். இதற்காக சிலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

    மழை சரிவர பெய்யாததால் உளுந்து பயிர்கள் கருகின. கடன் வாங்கி பயிர்செய்த பயிர்கள் கருகி விட்டதே. இனிமேல் கடனை எப்படி அடைப்பது என்று வேல்முருகன் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனுக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    சிதம்பரம் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடிபோதையில் புதுமாப்பிள்ளை ரகளையில் ஈடுபட்டதால் மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையை சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும், சிதம்பரம் அருகே உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    சிதம்பரம் வ.உ.சி. தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணப்பெண், அவரது உறவினர்கள் மற்றும் புதுமாப்பிள்ளை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு திருமண மண்டபத்தில் மது விருந்து வைத்தார்.

    நண்பர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர் நண்பர்களுடன் சென்று சமையல்காரர்களிடம் எனது நண்பர்கள் சாப்பிட உணவு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் உணவு எதுவும் இல்லை என்று கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த புதுமாப்பிள்ளை எனது நண்பர்களுக்கே உணவு இல்லையா? என்று சமையல்காரர்களிடம் தகராறு செய்தார். அவருக்கும், சமையல்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த சமையல்காரர்கள் சமைக்க முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேறப் போவதாக கூறினர். இதனால் மணப்பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை தகராறு நீடித்தது.

    மணமகனின் இந்த செயல் மணமகளுக்கு தெரிய வந்தது. அவர் ஆத்திரம் அடைந்தார். குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறினார். மற்றவர்கள் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

    பின்னர் மணமகள் தனது பெற்றோர் மற்றும் தோழிகளுடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    இது தொடர்பாக சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புதுமாப்பிள்ளை புகார் செய்தார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும், தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

    இதையொட்டி இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண்ணும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

    மணப்பெண்ணிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் பேசினார். அப்போது மதுவுக்கு அடிமையானவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் என்று மணமகள் கூறி கதறி அழுதார். இதைத் தொடர்ந்து திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பீட்டா அமைப்பை வெளியேற்ற வேண்டும் என்று கோரி கோ‌ஷம் எழுப்பிய போராட்டக்காரர்ககளை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
    கடலூர்:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாணவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    மழை காரணமாக தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு போராட்ட களம் மாற்றப்பட்டது. அங்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    நேற்று இரவும் போராட்டம் நீடித்தது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்ட பந்தலில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் போராட்டம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்று மாணவர்களிடம் தெரிவித்தனர்.

    இதை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்தனர். பின்னர் மாணவர்கள் போலீசாரிடம் நாங்கள் எங்களது அறவழி போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். அவர்கள் அங்கு நின்று கொண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும். பீட்டா அமைப்பை வெளியேற்ற வேண்டும் என்று கோரி 15 நிமிடத்திற்குமேல் கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதனால் கடலூர் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே 6-வது நாளாக நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
    கடலூரில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும்வரை ஓய மாட்டோம் என்று மாணவர்கள் ஆவேசமாக கூறினார்.
    கடலூர்:

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

    பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கின்றனர்.

    கடலூரில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தும் இடத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும் என முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் அதை போராட்டக்குழுவினர் ஏற்க மறுத்தனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் எங்களுக்கு தேவைஇல்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்த தடையும் இன்றி நிரந்தரமாக தீர்வு காண வேண்டும். அதுதான் எங்களுக்கு தேவை. அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

    அப்போது நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராடுவோம், பீட்டாவை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று அனைவரும் கோ‌ஷம் எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்திற்கு பொதுமக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். சிறுவர்- சிறுமிகள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை ஓயமாட்டோம் என உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர்.

    மழை, குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிதுகூட சோர்வு அடையாமல் போராடி வருகிறார்கள். போராட்ட பந்தலில் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கும்மியடி நடைபெறுகிறது. டிரம்ஸ் வாசித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாட்டு பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள், கிராம செவிலியர் சங்கத்தினர், மாற்று திறனாளிகள் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் களை சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

    போராட்டம் நடைபெறும் இடத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, பெண்ணாடம், வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வடலூரில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்த முயன்ற 28 மாடுகளை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் லாரி டிரைவருடன் சிறைப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. சந்தைக்கு வந்த வியாபாரி ஒருவர் 28 மாடுகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் மாட்டுச் சந்தைக்கு விரைந்து வந்தனர். மாடுகள் ஏற்றப்பட்டிருந்த லாரியை மடக்கினர். அதில் மாடுகள் நெருக்கமாக நிறுத்தப்பட்டு கயிறுமூலம் கட்டி வைத்திருந்தனர். அந்த லாரியை டிரைவருடன் சிறை பிடித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரியில் ஏற்றப்பட்டிருந்த 28 மாடுகள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் லாரி டிரைவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அய்யப்பன் (41) என்பதும், மீன்சுருட்டியைச் சேர்ந்த தேவமலை என்பவரிடம் டிரைவராக பணியாற்று வதும் தெரியவந்தது.

    வடலூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தவிலைக்கு மாடுகளை வாங்கி இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டும் மழையில் தொடர் போராட்டம் நடத்தினர்.
    சிதம்பரம்:

    ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் வரலாறு காணாத அளவு நடக்கிறது. அவர்களுக்கு பொது மக்கள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிக்கும் அனைத்து துறை மாணவர்களும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவில் சிதம்பரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கனமழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் மாணவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், புயல் வந்தாலும் கவலைபடாமல் தொடர்ந்து போராடுவோம். பீட்டா அமைப்பை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகளை சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர். இன்று 5-வது நாளாகவும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் சிதம்பரம் நகரமே இளைஞர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. போராட்டம் நடக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் இன்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் காந்தி சிலை அருகே தி.மு.க.வினர் திரண்டனர்.

    முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    ஊர்வலத்தில் துரை.சரவணன் எம்.எல்.ஏ. நகரசெயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், மாமல்லன், மதியழகன், மனோகரன், முத்துப்பெருமாள், முத்து சாமி, சபாநாயகம், சோழன், திருமாவளவன், ராயர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி கேயன், துணை அமைப்பாளர் அப்பு சத்யநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பால சுப்பிரமணியன், நகர பொருளாளர் ஜாபர் அலி, அப்புசந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ரெயிலை மறிக்க சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    விருத்தாசலத்திலும் இன்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே இருந்து ரெயில் நிலையத்துக்கு தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் வந்தவர்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்குள் சென்று ஆர்பாட்டம் செய்தனர். அங்கு வந்த ரெயில் என்ஜினை மறித்து கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து நாச்சியார்பேட்டை ரெயில்வே கேட் அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சபா.ராஜேந்திரன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 7 பேர் மயங்கி விழுந்தனர். போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்த மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும்வரை எங்கள் உண்ணாவிரதத்தை கைவிடபோவதில்லை என்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உடனே மருத்துவரை வரவழைத்தனர்.

    போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மயங்கி விழுந்த மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
    பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
    சிதம்பரம்:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கடந்த 18-ந் தேதி வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்கலைக்கழகத்துக்கு வருகிற 22-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் ஊருக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

    சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் இருந்து மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

    ஸ்ரீமுஷ்ணம் காமராஜர் சிலை அருகே இணையதள நண்பர்கள் இன்று 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது இணையதள நண்பர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.
    கடலூர்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.

    லாரி, ஆட்டோக்கள், ஷேர்ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்களே ஓடின. சினிமா தியேட்டர்களில் காலை மற்றும் மதியகாட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை.

    கடை அடைப்பு போராட்டத்தினால் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.



    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தி.மு.க சார்பில் கடலூரில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.இள.புகழேந்தி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தி.மு.க சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர். அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், சுப்புராம், நாராயணசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வக்கீல்கள் சிவராஜ், சுந்தர், பிரபுமுத்து, நகர நிர்வாகிகள் பெரியசாமி, கோவலன், முன்னாள் கவுன்சிலர் தமிழரசன், மாணவரணி அகஸ்டின் பிரபாகரன் உள்பட ஏராளாமான தி.மு.க வினர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பாரதி சாலை, அண்ணா மேம்பாலம், லாரன்ஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். உடனே போலீசார் ரெயில் நிலைய வாசல் கதவை மூடினார்கள். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்து அடைந்தது. இதனை பார்த்த தி.மு.க வினர் போலீஸ் தடையை மீறி ஓடி ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை மறிக்க முயன்றனர்.

    அப்போது போலீசுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதை மீறி தி.மு.க வினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயிலை மறித்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி உள்பட தி.மு.க வினர் 300 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். அதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கண்டன கோ‌ஷம் எழுப்பி கொண்டு தனியார் மண்டபத்திற்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கடலூர்:

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் கமலநாதன், ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மாணவரணி நிர்வாகிகள் 8 பேர் கடலூர் மஞ்சக்குப்பம் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் உள்ள டவரில் திடீரென ஏறினர். அங்கு கட்சிக்கொடியை ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய, மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நீங்கள் டவரில் இருந்து கீழே இறங்கி வாருங்கள் என்று போலீசார் கூறினர். இதையடுத்து டவரில் ஏறி நின்ற 8 பேரும் கீழே இறங்கி வந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலு, சிவக்குமார், முத்துக்குமார், ராஜசேகர், பாண்டியன், ராம்பிரகாஷ், நகர தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×