என் மலர்
செய்திகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்
கடலூர்:
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் கமலநாதன், ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மாணவரணி நிர்வாகிகள் 8 பேர் கடலூர் மஞ்சக்குப்பம் பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் உள்ள டவரில் திடீரென ஏறினர். அங்கு கட்சிக்கொடியை ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய, மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நீங்கள் டவரில் இருந்து கீழே இறங்கி வாருங்கள் என்று போலீசார் கூறினர். இதையடுத்து டவரில் ஏறி நின்ற 8 பேரும் கீழே இறங்கி வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலு, சிவக்குமார், முத்துக்குமார், ராஜசேகர், பாண்டியன், ராம்பிரகாஷ், நகர தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.