என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் புதுப்பாளையத்தில் நேரு யுவகேந்திரா அலுவலகம் முன்பு தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடியுடன் முற்றுகையிட முயன்ற காட்சி.
கடலூர் நேரு யுவகேந்திரா அலுவலகத்தை கருப்பு கொடி ஏந்தி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
கடலூர்:
கடலூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேரு யுவகேந்திரா சார்பில் கடலூர் தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கடலூர் புதுப்பாளையம் நேரு யுகேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்
அதன்படி ஒருங்கிணைப்பாளர் திருமார்பன் தலைமையிலும் தலைவர் குழந்தைவேலனார் முன்னிலையிலும் தி.க பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சிவகுமார், திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அங்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, உடனடியாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காரணத்தினால் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடலூரில் நடைபெற உள்ள பேச்சு போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.