என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் மண்டலத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிபட்டன- நிரந்தர தீர்வு நடவடிக்கையாக இன்று முதல் ஏலம் விடப்படுகிறது
    X

    மேலப்பாளையத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட காட்சி.

    மேலப்பாளையம் மண்டலத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிபட்டன- நிரந்தர தீர்வு நடவடிக்கையாக இன்று முதல் ஏலம் விடப்படுகிறது

    • மேலப்பாளையம் ரவுண்டானா, அம்பை சாலை உள்ளிட்ட இடங்களில் மாடுகள் சுற்றித்திரிகிறது.
    • சாலைகளில் பிடிபடும் மாடுகளை ஏலம் விட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதிகளில் பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகிறது.

    வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

    குறிப்பாக பிரதான சாலைகளான டவுன் எஸ்.என்.ஹைரோடு, தெற்கு புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, அம்பை சாலை உள்ளிட்ட இடங் களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகிறது.

    இதனால் போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவ துடன், சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்தும் வருகிறார்கள்.

    புகார்

    எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர், கமிஷனருக்கு பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து புகார்கள் சென்றன.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாதுஷா மேற்பார்வையில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, அம்பை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் இன்று பிடிக்கப்பட்டது.

    சுமார் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர். வழக்கமாக இவ்வாறு பிடிபடும் மாடுகள் உரிமை யாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து இதுபோன்று அவர்கள் சாலையில் மாடுகளை திரியவிட்டால், அந்த மாடுகளை கோசாலை யில் அடைத்து வந்தனர்.

    இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் இன்று முதல் சாலைகளில் சுற்றித்திரிந்து பிடிபடும் மாடுகளை ஏலம் விட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிடிபடும் மாடுகள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அன்று மாலையே ஏலம் விடப்படும் என கூறப்பட்டுள்ளது.

    பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் சாலைகளில் திரியும் மாடுகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×