search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை-பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றத்தால் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை-பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றத்தால் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு

    • மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை

    நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    Next Story
    ×