search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை
    X

    ஆலோசனை கூட்டத்தில் ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ பேசிய காட்சி.

    கோவில்பட்டியில் விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை

    • ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.
    • ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். பின்னர் ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.

    இதைத்தொடர்ந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளின் அட்ட காசம் அதிகமாக உள்ளது.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியிடம் பேசினேன். தி.மு.க. அரசு, வனத்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைத்துள்ளனர். இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலத்திலும் காட்டுப்பன்றி களின் தொல்லை அதிகம் உள்ளது.

    1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி 6 அட்டவணை உள்ளது. இதில் காட்டுப்பன்றி 3-வது அட்டவணையில் உள்ளது. 5-வது அட்டவணையில் உள்ள விலங்குகளை யார் வேண்டுமானாலும் அழிக்கலாம். ஏனென்றால், அது மனிதர்களுக்கு, விவசாயத்திற்கு தொல்லை கொடுக்கக் கூடியது. எனவே, அந்த 5-வது அட்டவணையில் காட்டுப்பன்றிகளை சேர்க்க வேண்டும்.

    காட்டுப்பன்றியை 5-வது அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என கேரள மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது சாத்தியப்படாது என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. இதே மத்திய அரசு, உத்தரப்பிரகேசம், பீகார் மாநிலங்களில் காட்டுப்பன்றி களை அட்டவணை 5-க்கு மாற்றி, ஓராண்டு நடைமுறைப்படுத்தியது. அந்த ஓராண்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

    கேரளாவில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கிராமக்குழுக்களை கொண்டு காட்டுப்பன்றி களை வேட்டையாடலாம் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், ம.தி.மு.க. ஒன்றிய செயலர்கள் கேசவ நாராயணன், சரவணன், மாரிச்சாமி, நகர செயலர் பால்ராஜ், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவி விஜயலட்சுமி, நிர்வாகிகள் சிவகுமார், கோடையிடி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம், வன ராஜன், முத்துபாண்டியன், நாகராஜன், லியோ செண்பக ராஜ், கணேசன், பவுன்மாரியப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×