search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
    X

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

    • கருத்து கேட்பு கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார்.
    • ஸ்மார்ட் வகுப்பறைகள் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகம் சாரல் கலையரங்கில், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் (உயர்தர அறிவுத்திறன்) வகுப்பறைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'அனைத்து பள்ளிகளிலும் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நோக்கத்தில், தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பயில்வது போன்று அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் பயிலும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளை குறைகள் இல்லாத வண்ணம் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதி உள்ளதா? அல்லது எவ்வாறு அமைப்பது? என்பது குறித்து கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை வைத்து திறப்பது குறித்து கூறப்பட்டது. அவர்கள் திறந்து வைத்த பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று திறந்து வைக்கப்படும். அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரில் ஸ்மார்ட் வகுப்பறைகள் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்படும்' என்றார்.

    மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ் ஸ்மார்ட் வகுப்பறை சிறப்புகளை எடுத்துரைத்தார். உதவி திட்ட அலுவலர் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். முன்னதாக மாவட்ட பஞ்சாயத்து செயலர் சுப்ரமணியம் வரவேற்று பேசினார்.

    உதவி இயக்குனர் அனிதா நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கனகராஜ், சாலமோன், டேவிட், மகேஷ், ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணிமுத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×