search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே சுயதொழில், விவசாய கருத்தரங்கம்- நாளை மறுநாள் நடக்கிறது
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    களக்காடு அருகே சுயதொழில், விவசாய கருத்தரங்கம்- நாளை மறுநாள் நடக்கிறது

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ‌. ஏற்பாட்டில் சுயதொழில், விவசாய கருத்தரங்கம் களக்காடு அருகே நாளை மறுநாள் நடைபெறுகிறது.
    • படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    நெல்லை:

    நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி-களக்காடு சாலையில் கடம்போடு வாழ்வு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நாளை மறுநாள் (11-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறு, குறு கிராமிய தொழில்கள் மற்றும் வர்த்தக கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    கருத்தரங்கில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    எங்கே, எப்படிப்பட்ட லாபகரமான தொழில் தொடங்கலாம், அரசு மற்றும் வங்கிகளில் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி? ஒவ்வொரு தொழிலுக்கும் அனுமதி பெற யாரை அணுகுவது? தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எங்கே பெறலாம்? லாபகரமான விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்வது எப்படி? உள்ளிட்ட பயிற்சிகள் கருத்தரங்கில் வழங்கப்படும்.

    ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு சிறு, குறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்தின் நெல்லை கிளை உதவியோடு, மாவட்ட தொழில் மையம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    பல பொருட்கள் தயாரிப்பது எப்படி என்கிற நேரடி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.சுயதொழில் தொடங்க கடனுதவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு கடன் உதவிகளுக்கான ஆணைகளும் வழங்கப்படும்.

    கடனுதவி பெற விரும்புவோர், தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தொழில் திட்டத்துடன் (எந்திரங்கள் விலை) அன்றைய தினமே விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விடலாம்.

    சிறு, குறு கிராமிய தொழில்கள் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கருத்தரங்கம் நடைபெறும் நாள் காலை 8 மணிக்கு நாங்குநேரி மற்றும் களக்காடு பஸ் நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொழில் முனைவோர், சுயதொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் விவசாய தொழில் செய்வோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×