என் மலர்
உள்ளூர் செய்திகள்

காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை
- நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இதற்காக மாவட்டத்திலுள்ள 15 வட்டாரங்களிலும், தினமும் 195 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் ப்ளு (இன்புளுயென்சா) போன்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், உடல்சோர்வு மற்றும் தொண்டை வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த காய்ச்சல் 4-7 நாட்கள் முதல் 2-3 வாரங்கள் வரை தொடரும். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்திலுள்ள 15 வட்டாரங்களிலும், தினமும் 195 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறையினர் மூலமாக காய்ச்சல் பாதித்த கிராமங்களை கண்டறிந்து வட்டாரத்திற்கு 3 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் என 45 முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும், 2 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காய்ச்சல் பாதித்த நபர்கள், உடனடியாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகடை களில் மருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சல் பாதித்த நபர்கள் தனிமையில் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்ததால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






