search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் கோவை
    X

    தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் கோவை

    • தினமும் அல்லல்படும் மக்கள்- நிரந்தர தீர்வு கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.
    • மேம்பால கீழ் பகுதி-சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த சில தினங்களாகவே காலையில் மிதமான வெயிலும், மாலை நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நேற்று காலை வெயில் தாக்கம் குறைந்து இதமான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து, பகல் வேளையே இரவு போன்று காட்சியளித்தது.

    தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. லேசான மழையாக தொடங்கி பலத்த மழையாக 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இதன் காரணமாக, கோவை அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஸ்டேட் பாங்க் ரோடு, ஆத்துப்பாலம் ரோடு, சுந்தராபுரம் சாலை என நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சாலையே தெரியாத அளவிற்கு முழுவதுமாக மறைந்து குளம் போல தேங்கியதுடன், ஆறாகவும் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சாலைகளில் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனை பார்க்கும் போது, கடலில் படகு மிதந்து செல்வதை போன்று உணரமுடிந்தது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.

    வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.மழைக்கு ஒதுங்க முடியாமலும், ரோட்டில் செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் தவிப்படைந்தனர்.

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதி சுரங்கப்பாதை, வடகோவை மேம்பால சுரங்கப்பாதை, கிக்கானி பள்ளி ரெயில்வே பாலம், லங்கா கார்னர் பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் தவிப்படைந்தனர்.

    கோவை சங்கனூரில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியிலும் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக வந்த கல்லூரி பஸ் சிக்கி கொண்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். லங்கா கார்னர் பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்சை பொதுமக்கள் தள்ளி வெளியே மீட்டனர்.

    மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தேங்கியுள் மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேம்பால கீழ் பகுதிகளில் வெள்ளம் வழிந்து செல்லும் வடிகால் தாழ்வான இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து மேடான இடத்திற்கு வாய்க்கால் இருக்கிறது.

    இதன் வழியாக நீர் பாய வழியில்லாத நிலையில் குளம்போல் நீர் தேங்கி விடுகிறது. குறிப்பாக அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குகிறது.நகரில் உள்ள பெரும்பாலான சப்வேக்கள் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இங்கே மழை பெய்து வெள்ளம் தேங்கும் போது போக்குவரது பாதிப்பு ஏற்படுகிறது. நீர் குளங்களுக்கு செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்படவில்லை. வடிகால் பல இடங்களில் மேடாகவும், பிளாஸ்டிக் குவியல்களால் அடைக்கப்பட்டு இருக்கிறது.எனவே இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×