என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : தூத்துக்குடியில் 18 வகையான மரக்கன்று நடும் பணி  - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    மரக்கன்று நடும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பலர் உள்ளனர். 

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : தூத்துக்குடியில் 18 வகையான மரக்கன்று நடும் பணி - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    • தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
    • தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி மற்றும் மாமன்ற பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவு அடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்த மான தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனர்.

    சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள், 100-க்கணக்கான மாணவ-மாணவிகள், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் அனை வரும் மரக்கன்றுகளை நட்டனர். இன்று ஒரே நாளில் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடப்படுகிறது.

    மீதமுள்ள மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் அமைய பெற்றுள்ள பொது இடங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் நடப்பட உள்ளது. இதில் மா பலா கொய்யா புளி,நவா, வேம்பு,புங்கன்,பூவரசு, கொடுக்கம்புளி, வாகை, இடும்பை, நீர்மருது, மகாகனி, தூங்குவாகை,நெல்லி, வாடாச்சி, சரக்கொன்றை, தான்றிக்காய் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் இடம் பெற உள்ளன,

    இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது உரக்கிடங்கிற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட உள்ளது.

    நிகழ்ச்சியில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் தூத்துக்குடி மாநக ராட்சி மண்டல தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×