என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே கிராமசபை கூட்டத்தில்  தீர்மான நகல் கிழிப்பு - பரபரப்பு
    X

    ஓமலூர் அருகே கிராமசபை கூட்டத்தில் தீர்மான நகல் கிழிப்பு - பரபரப்பு

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
    • இதுவரை அந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்து எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு சென்றார்.

    ஓமலூர்:

    ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளாட்சி தினத்தை சிறப்பாக கொண்டாடி கிராம சபை கூட்டங்கள் நடத்தபட்டது. கோட்டைமாரியம்மன்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சம்பு சண்முகம் முன்னிலை வகித்தார். கோட்டமேட்டுபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தலைமையிலும், வெள்ளைக்கல்பட்டி தலைவர் கண்ணன் தலைமையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில், மதுக்கடையை அகற்ற கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில், கலந்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவர், காமலாபுரம் கிராமத்தில் 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அரசின் அனைத்து விதிகளையும் மீறி செயல்படும் இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்து எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு சென்றார். இதேபோன்று பெரியேரிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு 11-வது வார்டு பெண் உறுப்பினர் பவித்ரா, விளக்குகளை அணிந்துகொண்டும், வாயை கட்டிக்கொண்டும் நூதன வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தனது வார்டு பகுதியான தன்டானூர் பகுதிக்கு தெரு விளக்குகள் அமைத்து கொடுக்கவில்லை. தனது வார்டு வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்றும் கூறினார். தொடர்ந்து வாயை கட்டிக்கொண்டு கூட்டத்திற்கு வந்த அவர், தன்னை புறக்கணிக்கும் நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி, கூட்டம் நடக்கும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது கண்துடைப்பு என்று கூறி வார்டு உறுப்பினர்கள் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர்.

    Next Story
    ×