search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    கோவை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு ஒத்திகை நிகழ்ச்சி

    • டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டார்.

    கோவை,

    தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் வழங்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 குடும்ப அட்டைகள் உள்ளன. 1401 ரேஷன்கடைகள் உள்ளன.

    கோவையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    அதன்படி முதல்கட்டமாக 839 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் 562 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடைபெறும்.

    கடந்த 20-ந் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர். அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது. டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இன்று கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாம்களில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் மாதிரி பதிவு முகாம் நடை பெற்றது. ஆர்.எஸ்.புரம் பிஷப் உபகாரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விண்ணப்பங்கள் பெறும் மாதிரி முகாமை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எவ்வாறு பெறப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விண்ணப்பம் கொடுக்க வரும் பெண்களிடம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். தகுதியான நபர்களுக்கு உரிமை தொகை கிடைப்பதற்கு தேவையான அத்துனை ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

    மேலும் முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.விண்ண ப்பம் நிரப்ப தெரியாதவர்களுக்கு நீங்களே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    இதேபோல் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ம.ந.க.வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த மாதிரி முகாமையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர்கள் சேகர், மகேஷ் கனகராஜ், நிர்வாக அலுவலர் தமிழ்வேந்தன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பார்மன் அலி, மண்டல சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் உள்ளனர்.

    Next Story
    ×