என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36.20 லட்சம் மோசடி
- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36.20 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
- அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் சில போலி நியமனை ஆணை கடிதங்களை பறிமுதல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.36.20 லட்சம் பணம் மோசடி செய்து, போலி ஆணை வழங்கிய தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள கண்டமங்கலம், குமிளங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(43). இவரது வீட்டுக்குச் சென்ற உறவினரான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(42), இவரது மனைவி மதியழகி(35) ஆகியோர் பணம் கொடுத்தால் தங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூ.4,90,000}மும், ரொக்கமாக ரூ.4 லட்சமும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், ஊரில் யாராவது படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள் அவர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பிரபாகரன், தமது ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகுபதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இவர்களிடம் சிமென்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை போன்ற இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27,10,000}யை பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து பிரகாஷ், பிரபாகரனுக்கும், கவிமணிக்கும் அஞ்சல் துறையில் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் அஞ்சல் துறையில் விசாரித்த போது, பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக பிரபாகரன், பிரகாஷிடம் கேட்டபோது இது பற்றி வெளியில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை வெட்டி கொலை செய்து விடுவதாக என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பிரபாகரன் கடந்த 29.9.2022 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மதியழகி ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி, உதவி ஆய்வாளர்கள் ரவி, முருகன் உள்ளிட்ட காவல் துறையினர், ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷையும், அரியலூர் ராஜீவ் நகர் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த பிரகாஷ் மனைவி மதியழகியையும் புதன்கிழமை இரவு கையும் களவுமாக பிடித்து, விசாரணை மேற்கொண்டு வியாழக்கிழமை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் சில போலி நியமனை ஆணை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.






