என் மலர்tooltip icon

    அரியலூர்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அரியலூரில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து போட்டியிடும். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் சுவாதி கொலையில் உரிய விசாரணை நடத்தி கொலையாளியை உடனே கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்களால் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தெரியவருகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டு கொலைகளில் ஈடுபடும் கூலிப்படையினரின் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அவர்களை ஒழிக்க வேண்டும்.

    தமிழக மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். வக்கீல்களுக்கு எதிரான சட்டம் வக்கீல்களின் உரிமையை பாதிக்கும். எனவே அவர்கள் போராட்டம் நடத்துவது நியாயமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற இந்து முன்னணி கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கீழமாளிகை, ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தில் கிறிஸ்தவ மதபோதகர்கள் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்து முன்னணி கட்சியினர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரை கண்டித்து இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறி இந்து முன்னணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி பெற்றனர்.

    இதையடுத்து நேற்று இந்து முன்னணி கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் ராஜகுருபாண்டியன், ஒன்றியச்செயலாளர் சரத்குமார், ஒன்றியத்தலைவர்கள் கண்ணாமணி, மணிகண்டன், பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக இந்து முன்னணியினர் போலீசாரை கண்டித்து ஊர்வலம் சென்றனர். ஆனால் அவர்கள் ஊர்வலத்துக்கு அனுமதி பெற வில்லை. இதனையறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துக்கருப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற 80 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெயங்கொண்டம் அருகே இன்று அதிகாலை மின்கம்பிகள் தைலமரத்தின் மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சொந்தமான தைலமரத்தோப்பின் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. மின்கம்பிகள் தாழ்வாகவும், தைலமரத்தின் மீது உரசி கொண்டு செல்வதால் எந்த நேரத்திலும் தீப்பற்றி எரிய வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் உள்ள பீங்கான் வெடித்து அதன்வழியே ஏற்பட்ட தீ தைலமரத் தோப்பில் பற்றியது. தீ மளமளவென பற்றியதில் அங்கிருந்த மரங்கள் எரிந்தன.

    இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்கொடுத்ததின் பேரில் நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட தைலமரங்கள் எரிந்து நாசமானது.

    கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அரியலூர் கலெக்டர் சரவணவேல் ராஜ் தெரிவித்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000–க்கு மிகாமல் இருத்தல் வெண்டும்.

    உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் வி‌ஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அழகிய மணவாளன் ஊராட்சிக்கு உட்பட்ட மேலராமநல்லூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து நேற்று மாலை கடும் துர்நாற்றம் வீசியது.

    இது குறித்து பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷப்பாட்டில் ஒன்று கிடந்தது. அதில் இருந்த வி‌ஷம் தண்ணீரில் கலந்திருப்பதும் தெரிய வந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அங்கு வந்தனர். அவர்கள், தொட்டியில் இருந்த தண்ணீரை உடனடியாக திறந்து வெளியேற்றினர். பின்னர் அந்த குடிநீர் தொட்டி முற்றிலுமாக கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் தூத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷம் கலந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கலந்தனர் என்று தெரியவில்லை. மாணவ, மாணவிகளை கொலை செய்ய நடந்த சதியாக இருக்கலாமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷம் கலந்திருப்பது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிகுழி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி அம்பிகா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 11-4-2016 அன்று வீட்டை விட்டு சென்ற அம்பிகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ரவிமீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லாட்டூர் பகுதியில் உள்ள கருவேலங்தோப்புக்குள் அம்பிகா தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து லாட்டூர் போலீசார் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்பிகா வீட்டருகே வசித்து வந்த லாரி டிரைவர் கலிய பெருமாள் (29) என்பவர் அம்பிகாவை எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அம்பிகாவை கலியபெருமாள் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    கலியபெருமாளுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தால் கிராமம். மேலும் அவர் அம்பிகாவின் கணவர் ரவிக்கு உறவினர் ஆவார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த கலியபெருமாள், ரவி உறவினர் என்பதால் அவரது வீட்டு அருகே ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு லாரிகளை ஓட்டி வந்தார்.

    மேலும் ரவி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் அம்பிகாவிற்கும், கலியபெருமாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதனிடையே கலியபெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதையறிந்த அம்பிகா, கடந்த 11-4-2016 அன்று கலியபெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் உன் மேல் உயிர் வைத்திருக்கிறேன். நீ என்னுடன் தான் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கலியபெருமாள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும் நான் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி செல்கிறேன். அங்கு சென்றுவிட்டு வந்த பிறகு நான் உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அம்பிகா, மீண்டும் கலியபெருமாளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் உன்னை இப்போதே பார்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது கலியபெருமாள் நான் சேலத்தில் நிற்கிறேன் என்று கூறவே, உடனே அம்பிகா அங்கு சென்றார். பின்னர் அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அழைத்து சென்ற கலியபெருமாள், லாட்டூர் பகுதியில் உள்ள கருவேலந்தோப்புக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்துள்ளார். அம்பிகாவின் சிம்கார்டு மூலம் போலீசார் விசாரணை நடத்தி கலியபெருமாளை கைது செய்து விட்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கணவனின் குடிபழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சாலக்கரை கிராமத்தை சேர்ந்த மகிமை மனைவி  அந்தோணியம்மாள் (வயது 62). இவரது மகள் பவுல்ராணியை உறவினர் சின்னப்பன் மகன் அந்தோணிசாமி என்பவருக்கு கடந்த 9 வருடம் முன்பு திருமணம் செய்து வைத்தார்.  

    பவுல்ராணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்தோணிசாமி அடிக்கடி குடித்துவிட்டு  வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பவுல்ராணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  அந்தோணியம்மாள் மகளை சமாதானம் செய்து மருமகன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

    கடந்த 2-ம் தேதியன்று வீட்டில் இருந்தபோது  வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தானே தீவைத்துகொண்டார்.  ஆபத்தான சூழ்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பவுல்ராணி இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
    செந்துறை அருகே தரமற்ற தார்சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    செந்துறை:

    செந்துறை, அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பத்தூர் முதல் படைவெட்டிக்குடிக்காடு வரை 4 கிலோ மீட்டர் மண் சாலையை தார்சாலையாக மாற்ற கடந்த ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன்படி, ரூ.93 லட்சத்திற்கு டெண்டர் எடுத்து வேலைகள் நடைபெற்று வந்தது.

    முதலில் கிராவல் மற்றும் செம்மண் மூலம் சாலை அமைக்கப்பட்டு அதன் மேல் தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சாலை தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், தார்சாலை அமைப்பதில் தரம் இல்லை எனவும், குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் சாலையின் உயரம் இருப்பதாகவும், கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு மிகவும் தரமற்றதாக இருப்பதாகவும் கூறிய பொதுமக்கள், இயந்திரத்தால் தரமானதாக போடப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனையறிந்த செந்துறை ஒன்றிய பொறியாளர் குமார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை தரமாக இயந்திரத்தால் போடப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம் அருகே தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக அண்ணணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், இவர் விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில்கடந்த 18-ம் தேதி இவரின் 2-வது மகன் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நான்காவது மகன் செல்வமுருகன் இருவரும் குடிபோதையில் வீட்டில் சண்டைபோட்டுள்ளனர்.

    இதில் கோபமடைந்த செந்தமிழ்ச் செல்வன் தனது தம்பியை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ்ச் செல்வன் வி‌ஷம் குடித்துவிட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

    தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக ஆண்டிமடம் போலீசார் செந்தமிழ்ச் செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்ட கலெக்டரை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பத்திர பதிவுத்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் கடந்த 13–ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட பதிவாளர் நிர்வாக பிரிவு அலுவலகத்தை பூட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கடந்த 13–ந்தேதி மதியத்தில் இருந்து 14–ந்தேதி மதியம் வரை அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

    பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களையும் சேவை பெற வந்த பொதுமக்களையும் வெளியேற்றி விட்டு, அலுவலகத்தை பூட்டியதால் பதிவுத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அரியலூர் மாவட்ட பதிவாளர் 14–ந்தேதி அன்று கலெக்டரிடம் மன்னிப்பு கோரிய பின்னர், அந்த அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சம்பவம் பதிவுத்துறை அலுவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரியலூர் கலெக்டரை கண்டித்து போராட்டம் நடத்த பதிவுத்துறையை சேர்ந்த 3 சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கின.

    இந்த குழு எடுத்த முடிவின்படி இன்று தமிழகத்தில் உள்ள சுமார் 65000 பதிவுத்துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வது எனவும், ஜூலை 16–ல் திருச்சியில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வது எனவும் தீர்மானித்தனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 9மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். அரியலூரில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் 20 சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 60 ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

    மேலும் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்கள் முன்பு, போராட்ட காரணம் குறித்து பதாகைகள் வைத்திருந்தனர்.

    ஜெயங்கொண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன்கள் மோதலில் தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் விழுப்புரம் மாவட்டம் இளவரசன்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். முதல் மகன் அறிவுசெல்வன் தனது மனைவியுடன் வடலூரிலும், மூன்றாவது மகன் வெற்றிச்செல்வன் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்கள்.

    இரண்டாவது மகன் செந்தமிழ்ச்செல்வன் (26) மற்றும் 4-வது மகன் செல்வமுருகன் (23) இருவரும் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

    செந்தமிழ்ச்செல்வன், செல்வமுருகன் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    கடந்த சில தினங்களாக செல்வமுருகன் சொத்தில் பங்கு கேட்டும், தனக்கு திருமணம் செய்துவைக்ககோரியும் அவரது தாயார் செல்லம்மாளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று செந்தமிழ்ச்செல்வன், செல்வமுருகன் இருவரும் இடையக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    செல்வமுருகன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதைபார்த்த வெற்றிச்செல்வன் தனது தம்பியை தடுத்து தாக்கியுள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த செல்வமுருகன் அருகில் உள்ள கருங்கல் உரலில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான செல்வமுருகன் உடலை கைப்பற்றி அவரது அண்ணன் செந்தமிழ்ச் செல்வனை தேடி வந்தார்.

    இதற்கிடையே செந்தமிழ்ச் செல்வன் தம்பியை கொன்று விட்டோமே என்று மன வேதனையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டுக்கு அருகில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரின் இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு ஒருவர் இறந்தும், மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் பள்ளி புதிய கட்டடப் பணிகளை கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் பார்வையிட்டு கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வெள்ளுர் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி புதிய கட்டடப் பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவண வேல்ராஜ் பார்வையிட்டு கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :–

    தமிழக முதல்வர் கல்விக்காக மொத்த வரவு செலவுத்திட்டத்தில் 6–ல் ஒரு பகுதியை கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கீடுசெய்து, விலையில்லா பாடப்புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து, தேர்ச்சிலும், மதிப்பெண் விழிக்காட்டிலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் முதன்மை மாநிலமாக கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தேவையான அளவிற்கு உரிய காலத்தில் நிறைவேற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில், அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் மூலமாக 2010–11ம் ஆண்டில் தாமரைக்குளம் மற்றும் சாத்தம்பாடி ஆகிய இரண்டு பள்ளிகளும், 2011–12ம் ஆண்டில் வாரணவாசி, வெள்ளுர், ரெட்டிப்பாளையம், தென்கச்சிபெருமாள் நத்தம், கொல்லாபுரம், நாகம்பந்தல், உல்லியக்குடி மற்றும் தூத்தூர் ஆகிய 8 பள்ளிகளும், உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் தூத்தூர் உயர்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு நிலையில் உள்ளது.

    இப்பள்ளியை தவிர மற்ற பள்ளிகளுக்கு 2015–16 ஆம் கல்வியாண்டில் ஒரு பள்ளிக்கு ரூ.168.81 இலட்சம் வீதம் தாமரைக்குளம் மற்றும் சாத்தம்பாடி இரண்டுப் பள்ளிகளுக்கு ரூ.337.62 இலட்சம் நிதி ஒதுக்கீடும், மீதமுள்ள எட்டுப் பள்ளிகளுக்கு ரூ.144 இலட்சம் நிதியை முதல் தவணையாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பொதுப்பணித் துறையின் மூலமாக 10 பள்ளிகளுக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளில் வெள்ளுரில் நடைபெற்றுவரும் புதிய பள்ளி கட்டடப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து கட்டுமான பணிகளும் உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே புதிய கட்டடங்கள் பயன் பாட்டிற்கு விடப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

    ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

    ×