என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராள மான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியில் கடந்த 30-ந்தேதி 11-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் 12-ம்வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் சாதிப்பெயரை கூறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது.

    இதே போல் நேற்று குறிச்சிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் 12-ம்வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் சாதிப் பெயரை கூறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, பிரச்சினைக்கு காரணமான 13 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 13 மாணவர்களும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே லாரி–கார் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). லாரி டிரைவர். இவர், திருச்சியிலிருந்து புறப்பட்டு அரியலூர் வழியாக கடலூரை நோக்கி லோடு ஏற்றுவதற்காக லாரியை ஒட்டி சென்றார். அப்போது நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த கார், சதீஷ் ஓட்டி வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்சுருட்டி போலீசார் அந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும், இவர் தனது நண்பர்கள் கார்த்திக், பாலசுப்பிரமணியன், கந்தசாமி காளிமுத்து ஆகியோரை அழைத்து கொண்டு தஞ்சாவூர் பகுதியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

    மேல் சிகிச்சைக்காக சூர்யா உள்ளிட்ட 5 பேரும்  தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே துக்கக்காரியத்திற்காக சென்ற போது டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம் குமராட்சி அருகேயுள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மனைவி செந்தாமரை செல்வி ( வயது 36). இவர் தனது உறவினர் 13 பேருடன் ஒரு டிராக்டரில் கடந்த 27–ம் தேதியன்று ஆண்டிமடம் நோக்கி உறவினர் இறந்த துக்கக்காரியத்திற்காக சென்றனர்.

    காடுவெட்டி ஆண்டிமடம் சாலையில் தைலமரத்தோப்பு அருகில் செல்லும் போது திடீரென பிரேக் பிடித்த போது டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் செந்தாமரை செல்வி மற்றும் டிராக்டர் டிரைவர் கடலூர்மாவட்டம் இளங்கம்பூரை சேர்ந்த பாரதிராஜா (30) உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

    அவர்கள்  ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். செந்தாமரைசெல்வி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    செந்துறை பகுதியில் மோதலில் ஈடுபட்டதாக தி.மு.க., பா.ம.க. பிரமுகர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே தின்பண்டம் வாங்குவது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பு மாணவர்களும் தங்களது ஊர்க்காரர்களிடம் தெரிவித்தனர். இதனால் இந்த சிறிய பிரச்சினை முற்றி இருபிரிவு ஆதரவாளர்களும் செந்துறை பஸ் நிலைய பகுதியில் மோதிக்கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. எனினும் இந்த மோதலில் அங்கிருந்த காய்கறி கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. மேலும் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அணில்குமார் கிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காய்கறி கடைகாரர் கல்யாணசுந்தரம் மனைவி செல்வக்கனி கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து தி.மு.க. பொறியாளர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் சிவ பாஸ்கர், பா.ம.க. நகர செயலாளர் நமசு உட்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் மோதலில் தொடர்புடைய பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி அருண் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நள்ளிரவில் கற்களால் தாக்கி இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு மேல் நிலைபள்ளி உள்ளது. இங்கு செந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று காலை இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் ஐஸ்கிரீம் வாங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு செந்துறை பஸ் நிலைய பகுதியில் இருதரப்பு மாணவர்களின் ஆதரவாளர்களும் திடீரென கற்களால் தாக்கி மோதிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த காய்கறி கடைகள், டீக்கடைகள் உள்பட 5-க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் பலர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தவே, இரு தரப்பினரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு முழுவதும் போலீசார் செந்துறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். இந்த மோதல் தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 20-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை 01.07.2016 முதல் 31.07.2016 வரை நடக்கிறது.

    அரியலூர்:

    ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக நாளை 01.07.2016 முதல் 31.07.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங் கொண்டம் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் பகல் 10.00 மணி முதல் 05.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 1.07.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 1.07.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் தேளுர், உடையார்பாளையம் வட்டத்தில் த.சோழன்குறிச்சி (வ) ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    ஆண்டிமடம் பெரிய ஏரி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம், வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 75). இவரது உறவினரான அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவிந்தராஜ் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் 20 பேர் ஒரு வேனில் சிலம்பூருக்கு சென்றனர். வேனை வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா ஓட்டினார்.

    ஆண்டிமடம் பெரிய ஏரி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த வெள்ளுர் கிராமத்தை சேர்ந்த லதா (40), மசலாம்பாள் (55), சுமதி (45), சவுந்தலா (58) , செந்தமிழ்ச்செல்வி (36), தேன்மொழி (55), கோவிந்தராஜ் (75) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×