என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 68). இவர் நேற்று ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலையில் கல்லாத்தூர் நோக்கி தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜாங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராஜாங்கத்தின் மனைவி அமிர்தம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குபதிவு செய்து லாரி ஓட்டிவந்த ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்த பில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் தனிநபர் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து கழிவுநீரும் தெருவில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
அந்த கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வருபவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து கிராம சுகாதார ஆய்வாளர், வட்டார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்தவித எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் மான்போர்ட் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 5–ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது.
இதில் அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி அணி மாநில விளையாட்டு போட்டியில் முதல் இடத்தையும், மதுரை திருநகர் இந்திரா காந்தி நினைவு பள்ளி அணி இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் தாணு மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், அரியலூர் மான்போர்ட் பள்ளி அணி நான்காம் இடத்தையும் பெற்றது.
பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் விநாயக மூர்த்தி, அரியலூர் ஆர்டிசி. குரூப் இயக்குனர் ஜவருல்லா ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஜான்சன், ஆனந்தம், துணை முதல்வர் இமானு வேல் அகஸ்டின், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி முன்னாள் மாணவர் தினேஷ் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம் கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் உத்திரஞானம் (வயது 67). இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜெயங்கொண்டம் அருகே குரு வாலப்பர் கோவில் பகுதியில் செல்லும் போது குறுக்கே மாடு வந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த உத்திரஞானம், சுமதி, கீதா, ஸ்ரீதர் ஆகியோர் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிந்து கார் டிரைவர் கடலூர் மாவட்டம் சூப்பனஞ் சாவடியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரஜினிகாந்த் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து, இவரது மகன் தனவேல் (வயது 55). இவர் அதேபகுதி மேட்டுத்தெருவில் உள்ள தனது நண்பர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்று ரவிச்சந்திரனிடம் பேசிவிட்டு வெளியே வந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் தனவேலின் மோட்டார் சைக்கிளை போலி சாவி மூலம் திறந்து எடுத்துச் செல்ல முற்பட்டார். இதை பார்த்த தனவேல், ரவிச்சந்திரன் இருவரும் ஓடிவந்து மர்மநபரை பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த மர்மநபரிடம் விசாரணை செய்ததில் இலையூர் மேலவெளியைச் சேர்ந்த சிவசாமி மகன் நீலமேகம் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து நீலமேகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாலிகான் (வயது 40). இவர் அரியலூர் கயிலாசநாதர் கோவில் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இதற்காக அரியலூர் வண்டிக்கார தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாலிகான் அவரது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் சென்றார்.
இந்நிலையில் ஜாலிகானின் தம்பி இக்பால் (35) கடையை திறப்பதற்காக இன்று காலை அரியலூர் வந்தார். வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து இக்பால் அரியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தேசியஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100நாள் வேலைப்பணியின் போது ஏரியில் தலை இல்லாத அம்மன்சிலை கண்டெடுக்கப்பட்டது.
வீரசோழபுரம் ஊராட்சியில் கடந்த 2 வாரமாக 100–நாள் வேலைப்பணி நடைபெற்று வருகின்றது. நேற்று காலை வழக்கம்போல் ஊராட்சியில் உள்ள வாண திரையான்குப்பம் வடக்கு தெருவில் உள்ள அரசலடி ஏரியில் 100–நாள்வேலை நடைபெற்றது.
அப்போது அதேபகுதியை சேர்ந்த தியாகராஜன் (67) மற்றும் சுந்தரநாதன் (80) ஆகியோர் மண் வெட்டிக்கொண்டு இருந்த போது மண்வெட்டியில் சத்தம் கேட்டது உடனடியாக மண்ணை தோண்டி பார்த்தபோது தலை இல்லாத அம்மன்சிலையை கண்டுபிடித்தனர்.
உடனடியாக ஊராட்சிமன்ற தலைவர் பிரகாசம், கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோருக்கு 100–நாள் பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். இந்த தலை இல்லாத கல்சிலை அம்மன் சிலையாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஊராட்சிமன்ற தலைவர் பிரகாசம், கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோர் சிலையை நேரில் பார்வையிட்டு மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஜெயங்கொண்டம் தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசம் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோர் தலைஇல்லாத அம்மன்சிலையை ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத கல்சிலைக்கு பொதுமக்கள் பூஜைசெய்து வழிபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெங்கொண்டம் வட்டம், உடையார்பாளையம் (கிழக்கு) சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொருப்பு பூமி தலைமையில் நடைபெற்றது.
இம்மனுநீதி நாள் முகாமில் செய்தித்துறை, ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வேளாண்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இம்மனுநீதி நாள் முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, போன்ற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 233 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தாவது, தமிழக அரசு கல்விக்காகவும், சுகாதாத்திற்காகவும், பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பள்ளிவயது குழந்தைகளை படிக்க வைத்து கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இம்மனுநீதி முகாமில் முதியோர், விதவை உதவித்தொகை ஆணைகள் 138 நபர்களுக்கும், 7 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 44 நபர்களுக்கு பட்டாமாற்ற ஆணைகளும், வருவாய்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு என 139 பயனாளிகளுக்கு நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது.
இம்மனுநீதி முகாமில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், உடையார்பாளையம் பேருராட்சித்தலைவர் பானுமதி இராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் பா.டினாகுமாரி வரவேற்றார். நிறைவாக ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் திரு.திருமாறன் நன்றி கூறினார்.
விருதுநகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ராஜ். இவர் மதுரையில் போதை தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கினை அலெக்ஸ் ராஜ் விசாரித்துள்ளார். அப்போது லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்ப உதவி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்து வந்தது.
மேலும் அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அலெக்ஸ் ராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனாலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விட்டது தொடர்பான வழக்கில் அலெக்ஸ்ராஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை மதுரை கோர்ட்டு நேற்று உறுதி செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னைக்கு நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை, பாண்டியன், முத்துநகர் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவை அவ்வப்போது சிக்னல் பிரச்சினை காரணமாக தாமதாக செல்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியலூரை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக சிக்னல் போடப்பட்டிருந்தது. சிக்னலுக்கு சுமார் 10 மீட்டர் முன்னதாகவே ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் அதனை கவனிக்காத கன்னியாகுமரி என்ஜின் டிரைவர் சிக்னலை கடந்து மற்றொரு டிராக்கில் ரெயிலை இயக்கினார். அந்த டிராக்கானது தற்காலிகமாக ரெயிலை நிறுத்தி வைப்பதற்கான யார்டு பகுதியாகும். இதனால் சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் அந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் எலக்ட்ரிக் என்ஜின் தானாக நின்றது.
மேலும் அந்த ரெயிலை பின்னோக்கி கொண்டுவர முடியாத சூழ்நிலையும் உருவானது.
இதையடுத்து அரியலூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பின்னோக்கி இழுக்கப்பட்டு மற்றொரு டிராக்கில் விடப்பட்டது. அதன்பின்னர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வழிவிடப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது. என்ஜின் டிரைவரும் மாற்றப்பட்டு வேறு டிரைவர் ரெயிலை இயக்கி சென்றார்.
இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை, அனந்தபுரி, முத்துநகர், மலைக்கோட்டை, பாண்டியன் உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் சிக்னல் சரிசெய்யப்பட்டு சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்றொரு டிராக்கில் இயக்கப்பட்ட ரெயில் தொடர்ந்து வேகமாக சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.
எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக திருச்சியில் இருந்து அதிகாரிகள் ஆர்.எஸ்.மாத்தூர் சென்றுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு மரச்சக்கர நாற்காலிகளையும், 7 நபர்களுக்கு ஊன்றுகோல்களையும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.51 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.






