என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தலை இல்லாத அம்மன்சிலை கண்டுபிடிப்பு
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தேசியஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100நாள் வேலைப்பணியின் போது ஏரியில் தலை இல்லாத அம்மன்சிலை கண்டெடுக்கப்பட்டது.
வீரசோழபுரம் ஊராட்சியில் கடந்த 2 வாரமாக 100–நாள் வேலைப்பணி நடைபெற்று வருகின்றது. நேற்று காலை வழக்கம்போல் ஊராட்சியில் உள்ள வாண திரையான்குப்பம் வடக்கு தெருவில் உள்ள அரசலடி ஏரியில் 100–நாள்வேலை நடைபெற்றது.
அப்போது அதேபகுதியை சேர்ந்த தியாகராஜன் (67) மற்றும் சுந்தரநாதன் (80) ஆகியோர் மண் வெட்டிக்கொண்டு இருந்த போது மண்வெட்டியில் சத்தம் கேட்டது உடனடியாக மண்ணை தோண்டி பார்த்தபோது தலை இல்லாத அம்மன்சிலையை கண்டுபிடித்தனர்.
உடனடியாக ஊராட்சிமன்ற தலைவர் பிரகாசம், கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோருக்கு 100–நாள் பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். இந்த தலை இல்லாத கல்சிலை அம்மன் சிலையாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஊராட்சிமன்ற தலைவர் பிரகாசம், கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோர் சிலையை நேரில் பார்வையிட்டு மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஜெயங்கொண்டம் தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசம் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் சுந்தரசேகரன் ஆகியோர் தலைஇல்லாத அம்மன்சிலையை ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத கல்சிலைக்கு பொதுமக்கள் பூஜைசெய்து வழிபட்டனர்.






