என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழுர் கோட்டியால் பாண்டி பஜாரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு தா.பழுர் காலனி தெருவை சேர்ந்த திருமுருகன் (வயது 35) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு, வியாபாரமான பணம் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். கோட்டியால்– கீழமிக்கேல்புரம் இடையே வனத்து சின்னப்பர் ஆலயம் ஆர்ச் அருகே செல்லும் போது, திடீரென அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் 5பேர் திடீரென பாய்ந்து வந்து, திருமுருகனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த 5பேரும் சேர்ந்து , திருமுருகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.90ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து திருமுருகன் தா.பழுர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது55), விவசாயி. இவர் தனது மாடுகளை வீட்டின் முன்புறம் உள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தார்.
நேற்று மாலையில் இப்பகுதியில் திடிரென மழை பெய்ந்தது. அப்போது பலமான இடி சத்தம் கேட்டது. குணசேகரன் வீட்டின் முன்புறம் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், 40 அடி உயரமுள்ள தென்னை மரம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தென்னை மரத்தின் கீழ் கட்டப்பட்டு இருந்த குணசேகரனின் பசு மாடு மின்னல் தாக்கியதில் இறந்தது போனது.
தென்னை மரம் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த நிலையில் ஜெயங்கொண்டம் தீ அணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயை அனைத்தனர். மின்னல் தாக்கியதில் பசு மாடு இறந்த செய்தி கேட்டு அந்த பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது–
ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 01.08.2016 முதல் 31.08.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம் – தா.பழூர் – ஜெயங்கொண்டம் –மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற விருக்கிறது.
மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள குவாகம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 44) இவரது மனைவி ராஜேஸ்வரி (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
வல்லம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிலேயே கணேசன் வசித்து வந்தார். இந்நிலையில்கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் இருந்த கணேசன் நேற்று இரவு 7.40 மணி அளவில் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் அவரின் உடல் முழுதும் பற்றி எரிந்தது. பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த குவாகம் போலிசார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி குவாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூரில் அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கமல கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளவழகன், அண்ணாதுரை, துரை மணிவேல், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சைமுத்து, மாவட்ட அணி செயலாளர் சங்கர் (மாணவர் அணி), ஜீவா (மகளிரணி), சிவசுப்பிர மணியன் (இலக்கிய அணி), சிவசங்கர்(இளைஞரணி) அக்பர் ஷெரீப் (சிறுபான்மை பிரிவு), வெங்கடாஜலதிபதி (வக்கீல் பிரிவு) மருதை (தொழிற்சங்கம் ), ஜெய ராமன் (மருத்துவ அணி)யூனியன் சேர்மன்கள் கவிதா சேப் பெருமாள், ஜெயசுதா (தா. பழுர்), சீனிவாசன் ( திருமானூர்), ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, குமரவேல், வரதராஜன், சிங்காரம், கல்யாண சுந்தரம், நகர செயலாளர்கள் கண்ணன், செல்வராசு, பேரூராட்சி செயலாளர்கள் பெருமாள், லாரன்ஸ், கல்லங்குறிச்சி பாஸ்கர், வக்கீல் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கமலகண்ணன், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சந்திரகாசி எம்.பி. ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முடிவில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சேகர் நன்றி கூறினார்.
அரியலூர்:
அரியலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரியலூர் மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள பழுதடைந்த தளவாட சாமான்கள் (சேர், டேபிள், பீரோ போன்றவை) ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மர சேர், இரும்பு சேர், ஒயர் சேர், ஸ்டீல் சேர், ரோலிங் சேர், மர டேபிள், மர பெஞ்ச், ஸ்டீல் பெஞ்ச், மர டெஸ்க், ஸ்டீல் பீரோ உள்ளிட்ட 223 பொருட்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் பழுதடைந்த தளவாட சாமான்களின் விபர பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் 15 நாட்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நிர்வாக அதிகாரி முன்னிலையில் அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீடு பட்டியலை தனிக் கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, அரியலூர் என்ற விலாசத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ 5.8.2016–க்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் இது சம்பந்தமான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதிக மதிப்பீடு வழங்குபவருக்கு பட்டியலில் உள்ள தளவாட சாமான்கள் வழங்கப்படும். தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு வழங்கிய நபர் உடனடியாக தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 55). இவரது மனைவி கலைச்செல்வி(50). கடந்த ஒரு வாரமாக மன உலைச்சலில் இருந்து வந்துள்ளார். இது பற்றி கணவன் கேட்டும் ஏதும் பதில் சொல்லாமலேயே இருந்துள்ளர். இந்நிலையில் நேற்று காலை குடும்பத்தார் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அன்புச் செல்வன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் இளஞ்செழியன். இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை ஏதும் இல்லாததால் மனமுடைந்து தினமும் குடித்துவிட்டு வந்து தூங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 23–ம் தேதியன்று காலை மனைவி சுமதி(வயது 30) 100–நாள் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதை அறிந்து அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் நமசிவாயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக துளிர் இல்லங்கள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். உதய நத்தம் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தார். துளிர் இல்லங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் மணத்துணைநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் டாக்டர்.வளர்மதி, டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய பெயர்களில் துளிர் இல்லங்கள் தொடங்கப்பட்டன. அறிவியலின் தேவை, முக்கியத்துவம் மற்றும் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்களை உருவாக்கக்கூடிய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துதல், அறிவியல் சிந்தனைகள் வளர்த்தல், படைப்பாற்றல் திறனை வளர்த்தல், கல்வி சார்ந்த புத்தகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அறிவியல் புத்தகங்களை வெளியிடுவது போன்றவற்றை பற்றி மாணவர்களிடம் கருத்துகளை வழங்கினர்.
இதன் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் துளிர் திறனறிவு தேர்வு, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல் போன்றவற்றை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் செங்குட்டுவன் செய்து ஒருங்கிணைத்திருந்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி வரவேற்றார். இறுதியில் மந்திரமா, தந்திரமா என்ற அறிவியல் விழிப்புணர்வு நடத்திய ஆசிரியர்கலை வாணன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை ஆபாசமாக விமர்சனம் செய்த உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் தயாசங்கர்சிங் என்பவரை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஞானசேகரன் தலைமைவகித்தார். சட்டமன்ற தொகுதி தலைவர் குரு முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை மாணவரணி அமைப்பாளர் பாரத் துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நீலமேகம், நிர்வாகிகள் அஜித், பாண்டியன், பகுஜன்பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி அமைப்பாளர் தீன தயாளன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்டசோழபுரத்தை சேர்ந்த பண்டரிநாதன் மனைவி தனலெட்சுமி (வயது 65). இவருக்கும் அதே ஊரைசேர்ந்த வெங்கடாசலம் மகன் சீதாபதி(34) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 15-ம் தேதியன்று ஏற்பட்ட தகராறில் சீதாபதி மற்றும் சிலர் சேர்ந்து வீட்டிலிருந்த தனலட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த தனலெட்சுமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிந்து சீதாபதி, குருவாலப்பர்கோவில் பாரதி (35), தொட்டிகுளம் மோகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பூராசாமி மகன் இளையராஜா (34). இவரது மனைவி மாலதி (30). இளையராஜா அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 20–ம் தேதி இளையராஜா வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறு செய்துள்ளார். மாலதி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவியை அழைத்துவர முடிவு செய்து இளையராஜா மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி கூப்பிட்டுள்ளார். மாலதி வர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இளையராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை வெட்டியுள்ளார்.
இதை தடுக்க வந்த மாலதியின் தந்தை பால்ராஜையும் வெட்டியுள்ளார். உடன் அக்கம்பக்கம் நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடிவந்து காயம்பட்ட இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மாலதி மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாலதி மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றார்.






