என் மலர்tooltip icon

    அரியலூர்

    கோவில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை
    அரியலூர்:

    அரியலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் கடுகூர் அருகேயுள்ள பூமுடையான்பட்டி கிராமத்தில் பெரியநாயகி மற்றும் சந்தனத்தாய் அம்மன் கோயில் உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, கோயிலின் கதவு மற்றும் உள்ளே இருந்த உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உண்டியலில் ரூ.5 ஆயிரம் காணிக்கைகள் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த கயார்லாபாத் காவல் துறையினர், ஆய்வு செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
    வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார்  இரவு கோடாலிகருப்பூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை பார்த்தனர். உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் கோடாலி கருப்பூர் தோப்பு தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 40) வீரமணி (43) குடவாசல் தெருவைச் சேர்ந்த தங்கராசு (30) அவரது தம்பி முருகன் (25) குவாகம் வெற்றித் தெருவைச் சேர்ந்த அருள்மணி (31) ஆகியோர் என்பதும் ,

    அன்று இரவு கோடாலிகருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கடப்பாறை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை முதுகுளம் பகுதியைச்  சேர்ந்தவர் அருள்(வயது41). கடந்த 2011&ம் ஆண்டு இவர், ஆண்டிமடம்  ஒன்றியத்தில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி  திட்டத்தின் கீழ் தற்காலிக கணினி  ஆப்ரேட்டர் வேலைக்கு  சேர்ந்துள்ளார். 

    கடந்த 10  ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி  வந்த அவரை, கடந்தாண்டு நவம்பர்  மாதம் எவ்வித முன்னறிவிப்பும்  இல்லாமல் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம், அவரை பணி நீக்கம்  செய்துள்ளது. இது குறித்து பலமுறை  மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக  வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநரிடம் மனு அளித்தும்  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. 

    இதனால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவி,  மகள் ஆகியோரை அழைத்துக்  கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள்  குறைதீர் கூட்டத்துக்கு வந்தார்.  அங்கு அவர், தான் மறைத்து கொண்டு வந்த  மண்ணெண்னையை எடுத்து உடலில்  ஊற்ற முயன்றார். 

    இதை கவனித்த  காவல் துறையினர் விரைந்து சென்று தடுத்து,  மண்ணெண்னை கேனை  பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  அவர் தர்னாவில் ஈடுபட்டார்.  தகவலறிந்து வந்த காவல் துணைக்  கண்காணிப்பாளர் ராஜன்  கலெக்டரிடம் பேசி உரிய  நடவடிக்கை எடுப்பதாக  கூறியதையடுத்து அவர் எழுந்துச்  சென்றார். இதனால், மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  பரபரப்பான சூழல் காணப்பட்டது.
    நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளை பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:



    தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பேசிய போது, இந்தியாவிலேயே நுகர்வோர் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    நுகர்வோர் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால் மட்டும் போதாது, அதனுடைய தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் அதனுடைய தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருள்கள் அனைத்திற்கும் ரசீது பெறப்படவேண்டும்.

    உணவுப் பொருள்களில் ஏதேனும் கலப்படம் மற்றும் குறைகள் இருந்தால் அது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை உணவுப்பொருள்கள் உள்ளிட்ட நுகர்வோரின் புகார் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக சம்மந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களும் விழிப்புணர்வு அடைய முடியும்.

    நுகர்வோர் பாதுகாப்பிற்கான உரிமை, தகவல்பெறும் உரிமை, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் உரிமை, பிரதிநிதித்துவத்திற்கான உரிமை, குறை தீர்க்கப்படுவதற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை

    உரிமைகளும், விழிப்புணர்வோடு இருத்தல், ஈடுபாட்டுடன் இருத்தல், தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல், தவறுசெய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் பற்றி புகார் செய்தல், பொருள்களையும் சேவைகளையும் முறையாகப் பயன்படுத்தல், சுற்றுச்சூழல் குறித்து பொறுப்புணர்ச்சி கூட்டு முயற்சி உள்ளிட்ட கடமைகள் குறித்தும் விளக்கமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

    பின்னர்விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
    இரு சக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கடாரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்வர்கள் ஜெயக்குமார் (வயது28). சஞ்சிதா (25) இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை களாவார்கள்.

    இவர்கள் இருசக்கர வாகன த்தில் கடாரங்கொண்டான் கிராமத்திலிருந்து ஜெயங் கொண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சலுப்பை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (22) ஆலத்திபள்ளம் கிராமத்தை சேர்ந்த கௌதம் (23) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து தங்கள் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சாவடி அருகே வந்த போது இருசக்கர வாகனம் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஜெயக்குமார், கௌதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் மற்றும் சஞ்சிதாவை அப்பகுதியினர் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
     
    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், உயிரிழந்த ஜெயக்குமார் மற்றும் கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
    அரியலூர் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்தூர் கிராமத்திலுள்ள பெரியாண்டவர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முன்னதாக பெரியாண்டவர், பெரியநாயகி சாமிகளுக்கு பன்னீர், சந்தனம் இளநீர், கபம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து நிசானி உடல் கிழித்து குடலை  பிடுங்கி வல்லாலக்கோட்டை இடித்து வீதியுலா புறப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், ரத்த காட்டேரி போன்று வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று சிறுகளத்தூர் அருகே உள்ள மயானத்தை அடைந்தனர்.

    அங்கு  மயானக்கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில்  பொன்பரப்பி,   பெரியாக்குறிச்சி, கொடுக்கூர், மருவத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அரியலூர் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தின் ஓரத்தில் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக விருத்தாசலம் ரெயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர்,  உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    அதிகாலை சென்ற ரெயிலிலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்திருக்கலாமா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அல்லது யாரேனும் ஒடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டிருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இறந்த வாலிபர் ரோஸ் கலர் அரைக்கை சட்டை, நீல ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்."
    ஜெயங்கொண்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன் சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் கஞ்சா  இருப்பதாக மீன்சுருட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன்  தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். 

    சோதனையில் அவர்கள் சுமார் ஒரு 1.100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், சிற்றரசன், ஆரோக்கியராஜ் என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள்  3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டத்தில் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன்  வயது65  என்பவரது வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் சமையலறையில் உள்ளே சென்றுள்ளார். 

    அப்போது சமையலறையில் பாம்பு ஒன்று  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து உடனடியாக  ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

    தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு நிலைய அலுவலர்  மோகன்ராஜ்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும்  கருவியுடன் பாம்பை  உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
    திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரில் நடைபெற்ற ஐல்லிக் கட்டுப்போட்டியினை மாவட்ட  கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி  வைத்தார். 

    நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, இந்திய கால்நடை நலவாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் கலந்து கொண்டனர். 

    இப்போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழுமருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.   

    மேலும், மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னு லாப்தீன், மண்டல இணை இயக்குநர் (கால் நடைப் பராமரிப் புத்துறை) மரு.ஹமீதுஅலி, கோட்டாட்சியர் ஏழுமலை, உதவி இயக்குநர் செல்வராஜ், வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 7 சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. 

    நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக சாந்தி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளராக ஜீவா செந்தில் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சாந்தி கலைவாணன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை மாநில பிற்படுத்தப்பட்டோர் நத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைவர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். 

    தொடர்ந்து போதிய உறுப்பினர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.  ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க 10, அ.தி.மு.க., பா.ம.க. தலா 4, வி.சி.க. 2, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் நகராட்சி தலைவராக சுமதி சிவக்குமார் (வி.சி.க.) துணைத்தலைவராக கருணாநிதி (தி.மு.க.) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

    இதே போல உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவராக மலர்விழி (தி.மு.க.) துணைத்தலைவராக அக்பர் அலி (காங்கிரஸ்) வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவராக மார்கிரேட் அல்போன்ஸ் (தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
    அரியலூரில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில உறவினர் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் மெயின்ரோடு பகுதியில்  வசிப்பவர் ராசாங்கம் (வயது 50) இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். 

    நேற்று மதியம் அவரது வீட்டிற்கு, உறவினர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் வீட்டில் நடைபெற்ற விசேஷங்களுக்கு வர முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

    பின்னர் அந்த மர்ம நபர், ராசாங்கத்தின் வீட்டின் தோட்டத்தில் இருக்கும் சில மூலிகைகளின் பெயர்களை சொல்லி அவற்றை, தனக்கு சிறிது பறித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    இதையடுத்து ராசாங்கம் தோட்டத்திற்கு சென்று அவர் கேட்ட மூலிகைகளைப் பறித்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மர்ம நபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சந்தேகம் அடைந்த ராசாங்கம்,  வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10.5 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதேபோல் காரைக்குறிச்சி பட்டத்தெருவில் கண்ணாயிரம்(30) என்பவரது வீட்டில் ரூ.26 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை மற்றும் திருட்டு போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறதால், உறவினர் வீட்டு விஷேசங்களுக்காக வெளியூர் செல்வதற்கே அச்சமாக உள்ளது. போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

    போலீசார் கூறுகையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றோம். சந்தேகப்படும்படியாக யாராவது தென்பட்டால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
    ×