என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைத்தியநாதசுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாணம்
- வைத்தியநாதசுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்றதுமான தலமாகும். இங்கு வியாக்ர பரத முனிவரின் மகள் சுயசாம்பிகை தேவியருக்கும், சிலால் முனிவரின் மகன் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியையொட்டி நேற்று மாலை கோவில் முன்பு உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன், கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து, மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். பின்னர், நந்தியம்பெருமானும், சுயசாம்பிகை தேவியாரும் மணக்கோலத்தில் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமழபாடி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையில் அரியலூர், தஞ்சாவூர், திருமானூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






