என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்டைக்கு சென்றவர்கள் மீது தாக்குதல்
- வேட்டைக்கு சென்றவர்களை திருடர்கள் என நினைத்து கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்
- கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததால் 3 நரிக்குறவ இளைஞர்கள் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலையில் உள்ள மகிமைபுரம் பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிவா (வயது 20), ராமன் (37), புகழேந்தி (25) ஆகிய இளைஞர்கள் துப்பாக்கியுடன் இரவு அந்தப் பகுதியில் வவ்வால் வேட்டைக்கு சென்றனர்.
பூவாயி குளம் கிராமப் பகுதியில் அவர்கள் வேட்டையாட சென்ற போது அந்தப் பகுதி கிராம மக்கள் திருட வந்தவர்கள் என நினைத்து 3 பேரையும் பிடித்து கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவரது மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நள்ளிரவு ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் காயமடைந்தவர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






