என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.
போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் அரியலூர் விவசாயி உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை
- பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார்.
- செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் கடந்த 24-ந்தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மாமனார் செம்புலிங்கம் (வயது 54) என்பவரிடம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கடுமையான காயம் ஏற்பட்ட செம்புலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செம்புலிங்கத்தின் குடும்பத்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை கொண்ட சிறப்பு குழுவை நியமித்து அரியலூர் விவசாயி செம்புலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இன்று மதிய 12 மணிக்குள் பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதரார் தரப்பில் மருத்துவர் அல்லாத ஒரு பிரதிநிதியை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை 10.05 மணிக்கு செம்புலிங்கம் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. கார்த்திகேயன் உள்ளிட்ட மேற்கண்ட மருத்துவக் கல்லூரிகளின் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர். 11.45 மணியளவில் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மகன் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக பிரேத பரிசோதனை நடந்ததையொட்டி, திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாநாத், வன்னியர் சங்க துணைத் தலைவர் கதிர்ராஜா, தொழிற்சங்க பிரதிநிதி பிரபாகர், பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் செம்புலிங்கத்தின் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் அரியலூர் கொண்டு செல்லப்பட்டது.
மரணம் அடைந்த விவசாயி செம்புலிங்கத்தின் சொந்த ஊரான காசாங்கோட்டையில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கும், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






