search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் புயலால் மூடப்பட்ட அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன- பொதுமக்கள் நடைபயிற்சி
    X

    சென்னையில் புயலால் மூடப்பட்ட அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன- பொதுமக்கள் நடைபயிற்சி

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    Next Story
    ×