என் மலர்
உள்ளூர் செய்திகள்

17 மணி நேரம் கடந்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை
- அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மகனின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
சென்னை:
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அவரது காரில் அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் 17 மணி நேரத்தை கடந்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரூ.48 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.






