என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கை நவீனப்படுத்த திட்டம்
- குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை.
- கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ, மளிகை என சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. மார்க்கெட்டின் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பில் குளிர்பதன கிடங்கு உள்ளது. விற்பனை ஆகாமல் தேக்கமடையும் காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுத்திடும் வகையில் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தில் அவற்றை இந்த கிடங்கில் தேக்கி வைத்து வந்தனர். ஆனால் இந்த குளிர்பதன கிடங்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லை. இதனால் வியாபாரிகள் பலர் சொந்தமாக குளிர்பதன கிடங்கு அமைத்தும் தனியார் குளிர்பதன கிடங்குகள் மூலமும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கை நவீன முறையில் சீரமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மேலும் மார்க்கெட்டில் கழிவுகளை அகற்றுவது, சுகாதாரம், குடிநீர், மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐ.ஐ.டி. மூலம் விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளன. எனவே விரைவில் இதற்கான பணிகள் முடிந்து குளிர்சாதன கிடங்கு செயல்பாட்டுக்கு வரஉள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் இணைப்பு, கழிவுநீர்கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.
கோயம்பேடு மார்க்கெட்டில் 4 இடங்களில் போர்வெல் அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து மார்க்கெட் வளாகம் முழுவதும் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரி யத்திற்கு வரி செலுத்தாத காரணத்தால் மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ குடிநீர் சப்ளை ஏற்கனவே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






