என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளப்பட்டி- நீலாம்பூரில் புதிய போலீஸ்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை
- பீளமேடு போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்
- நீலாம்பூர் பகுதியை மையப்படுத்தி புதிய போலீஸ் நிலையம் தொடங்க அரசுக்கு கருத்துரு
கோவை,
கோவை மாநகரில் 20 சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 20 விசாரணை பிரிவு போலீஸ்நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதுதவிர போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், மகளிர் போலீஸ் நிலையங்கள், சைபர் கிரைம் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட சிறப்பு பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
இதில் பீளமேடு போலீஸ் நிலையம் அதிக எல்லை பரப்பை கொண்டுள்ளதால் ஹெவி காவல்நிலையமாக கருதப்படுகிறது. பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மத்திய, மாநில அலுவலகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் உள்ளன.
சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் எல்லை பரப்பளவு அதிகமாக இருப்பதால் சுழற்சிமுறையில் போலீசார் ரோந்து சென்றாலும், அதிக முறை செல்ல முடிவதில்லை. சமீபத்தில் சேரன் மாநகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது பீளமேடு போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகரில் சமீபத்தில் 3 புதிய போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. புறநகரில் இருந்து 2 போலீஸ்நிலையங்கள் இணைக்கப்பட்டன. அதேபோல பீளமேடு போலீஸ் நிலையத்தை பிரித்து, காளப்பட்டி பகுதியில் புதிய போலீஸ் நிலையம் ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அதுதொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் கருமத்தம்பட்டி உட்கோட்டத்தின் கீழ் இயங்கும் வகையில் சூலூர் போலீஸ் நிலைய எல்லையை பிரித்து நீலாம்பூர் பகுதியைமையப்படுத்தி புதிய போலீஸ் நிலையம் தொடங்க அரசு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிண்டு பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.






