என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானை
- வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன.
- காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடித்த வண்ணம் உள்ளது.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் முள்ளூர் பகுதியை சுற்றியுள்ள பலா தோட்டங்களில் பலாப்பழங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இதனால் இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன. மாதக்கணக்கில் அப்பகுதியிலேயே சுற்றிவந்த காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.
பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில் இப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை பார்க்க வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்ற னர்.
இதேபோல் நேற்று மாலை முள்ளூர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை படம்பிடிக்க சுற்றுலா பயணிகள் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி யானையின் மிக அருகில் சென்றனர். அந்த யானை அவர்களை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.
சுற்றுலா வரும் பயணிகள் எந்த இடங்களில் யானைகள் இருக்கிறது என்பது தெரியாமல் சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றிப்பார்க்க சென்று விடுகின்றனர். எனவே யானைகள் உலா வரும் இது போன்ற பகுதிகளில் வன பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






