என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சி: நெல்லை பேக்கரிகளில் பட்டாசு வடிவ சாக்லெட்டுகள் விற்பனைக்கு குவிந்தன - பழமையான பலகாரங்களுக்கும் மவுசு குறையவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீபாவளியின்போது அனைவரது வீடுகளிலும் தாங்களாகவே முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட ஏராளமான பலகாரங்களை தயார் செய்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
  • வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் புஷ்வானம், ராக்கெட், அணுகுண்டு, கம்பி மத்தாப்பூ, சரவெடி, பேட்டரி வெடிகள் போன்ற வடிவங்களில் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

  நெல்லை:

  தீபாவளி பண்டிகை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், பலகாரங்களும் தான்.

  தீபாவளி விற்பனை

  தீபாவளியின்போது அனைவரது வீடுகளிலும் தாங்களாகவே முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட ஏராளமான பலகாரங்களை தயார் செய்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால் சமீப காலமாக கடைகளை தேடி ஓடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் நவீன காலத்திலும் பாரம்பரியமிக்க கை சுற்று முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களுக்கு மவுசு குறையாமலேயே உள்ளது.

  நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெறும். இந்த ஆண்டும் பலகாரங்கள் தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேக்கரிகளில் புத்தம்புது இனிப்பு வகைகள் ஏராளமாக வந்தாலும், தீபாவளி பலகாரங்களில் கைச்சுற்று முறுக்குகள் தனித்தன்மை குறையாமல் விற்பனையாகி வருகின்றன.

  பலகார வகைகள்

  நெல்லை மாநகரில் பாளை மார்க்கெட், சந்திப்பு மற்றும் டவுன் மார்க்கெட் பகுதிகளில் பச்சரிசி முறுக்கு, புழுங்கல் அரிசி முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு, முள்ளு முறுக்கு, நெய் முறுக்கு, வெண்ணெய் முறுக்கு, தாம்பூல முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, வாசனை முறுக்கு, வெந்தய முறுக்கு என பல்வேறு வகைகள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதில் முள் முறுக்கு, தேன்குழல் முறுக்கு போன்றவை குழல்-அச்சு கொண்டு மட்டுமே தயாரிக்க முடியும்.

  முந்திரிக்கொத்து எனப்படும் இனிப்பு வகை மிகவும் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. கருப்புக்கட்டி, சிறுபயிறு, புழுங்கல் அரிசி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் இதனை குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் கொடுக்கலாம். அதிரசம், தட்டை, சீடை போன்றவையும் தீபாவளிக்காக ஆர்டர்கள் பெற்று தயாரிக்கப்படுகின்றன.

  வெடி சாக்லெட்டுகள்

  இதுதவிர சோமாசி, அச்சு முறுக்கு, ரவா லட்டு, மைசூர் பாகு, பாதுஷா, ஜாங்கிரி உள்ளிட்டவையும் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர மக்களும் அதிக அளவில் வாங்கி உட்கொள்ளும் வகையில் குறைந்த விலைகளில் அதாவது ரூ.5 முதல் ரூ.7 வரையிலும் லட்டு, சோமாசி, ஜாங்கிரி உள்ளிட்டவை விற்பனைக்கு தயாராகி வருகிறது.

  இதேபோல் பெரும்பாலான பேக்கரிகளில் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரையும் கவரும் வகையில் வெடி வடிவங்களில் விதவிதமான சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் புஷ்வானம், ராக்கெட், அணுகுண்டு, கம்பி மத்தாப்பூ, சரவெடி, பேட்டரி வெடிகள் போன்ற வடிவங்களில் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

  அல்வா வகைகள்

  இவை அனைத்தும் அப்படியே தத்ரூபமாக வெடிகள் போன்றே தயாரிக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுதவிர நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மஸ்கோத் அல்வா, ஓமப்பொடி, கடலை பனியாரம், துக்கடா, சீடை உள்ளிட்டவைகளும் அதிக அளவில் பேக்கரி கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

  திருமணம், சீமந்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முறுக்குகள் முக்கிய இடம் பிடிப்பதால் கடைகளில் அவற்றை வாங்குவது அதிகரித்துள்ளது. மாவு அரவை ஆலைகள் குறைந்ததாலும், எண்ணெய் விலையேற்றம், உள்ளிட்ட காரணங்களால் வீடுகளில் பலகாரங்கள் செய்வது மிகவும் குறைந்துள்ளது. முறுக்கு, அதிரசம், முந்திரிக்கொத்து போன்றவை அதன் தரத்துக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.

  கைச்சுற்றல் முறுக்கு

  இதுகுறித்து நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த 6 தலைமுறையாக கை சுற்று முறுக்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

  பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, எள்ளு, சீரகம், வனஸ்பதி ஆகியவை சேர்த்து முறுக்கு தயாரிக்கப்படுகிறது. கைச்சுற்றல் முறுக்கை எல்லோராலும் தயாரிக்க முடிவதில்லை. அதற்கென பயிற்சி பெற்றவர்களே தயாரிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கைச்சுற்றல் முறுக்கு தயாரிக்கத் தெரிந்தவர்கள் ஆயிரக்க ணக்கானோர் உள்ளனர்.

  இத்தொழிலில் வயதான பெண்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் மாவு உள்ளிட்ட பொருட்களை எந்த அளவில் கலந்து ருசியான கை சுற்றல் முறுக்கு தயாரிக்க முடியும் என்பதை தெரிந்தவர்கள். மாவு மற்றும் இதர பொருள்களை வழங்கினால் தீபாவளி பண்டிகையையொட்டி வீடுகளுக்கே வந்து கைச்சுற்றல் முறுக்கு தயாரித்துக் கொடுப்போரும் உள்ளனர்.

  ரூ.10 வரை விற்பனை

  ஒரு கிலோ மாவில் 60 முறுக்குகள் தயாரிக்க முடியும். நாங்கள் தயாரிக்கும் அதிரசம் ரூ.3 முதல் 5 வரையிலும், முறுக்கு ரூ.2 முதல் ரூ. 10 வரையிலும் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி கொத்துகள் உடனடியாக கிடைக்காது. இதனால் ஒரு வாரத்துக்கு முன்பே எங்களிடம் ஆர்டர் கொடுப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு தயாரித்து கொடுக்க வேண்டிய தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பாக முந்திரி கொத்துகளை உருட்டி வெயிலில் காய வைப்போம். அதன் பின்னர் ஆர்டர் தேதியில் எண்ணெயில் போட்டு எடுத்துக் கொடுப்போம்.

  இதுபோக கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது தாம்பூலம் முறுக்கும் தயாரித்து கொடுக்கிறோம். ஒரு பெரிய தாம்பூலத்தில் முழுவதுமாக முறுக்கு இருக்குமாறு ஒரே முறுக்காக சுற்றி கொடுப்போம். இதற்கு ஒன்றுக்கு ரூ. 50 பணமாக வாங்குகிறோம். கடந்த 6 தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இந்த முறை வழக்கத்தை விட விற்பனை அதிகமாகவே இருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×