search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே தனியார் கார் நிறுவனத்தில் தீ விபத்து
    X

    சூலூர் அருகே தனியார் கார் நிறுவனத்தில் தீ விபத்து

    • தீ விபத்தின் போது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இல்லை.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் கார் விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் இந்த நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் புதிய கார்கள் விற்பனை மற்றும் பழைய கார்களுக்கு பழுது பார்க்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    நேற்று இங்கு 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இரவு பணி முடிந்து ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டிச் சென்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு தீ பரவி மளமளவென எரிந்தது. இதை பார்த்து இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த பாலசுப்பிரமணி (58) அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் உடனடியாக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து விட்டு சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அருகில் உள்ள நிறுவனங்களில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களும், குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சூலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவி புஷ்பலதா ராஜகோபால் மற்றும் கோவை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு தீயணைப்பு பணிகளை உஷார்படுத்தினர்.

    பல மணி நேர போராட்டத்துக்கு பின் அங்கு பற்றி எரிந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இருந்தாலும் 15

    -க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து முற்றிலும் நாசமானது.

    ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு 50-க்கும் மேற்பட்ட கார்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர். இதனால் அந்த கார்கள் தப்பின.

    தீ விபத்தின் போது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் கார் பழுது நீக்கும் பகுதி, கார் விற்பனை பிரிவு, உதிரிபாகங்கள் வைக்கும் அறை, கணினி அறை ஆகியவற்றும் தீ பரவி அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

    தீ விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாற்றுப்பாதை வழியாக வாகனங்களை செல்ல ஏற்பாடு செய்தனர்.

    தீ விபத்து எதனால் ஏற்பட்டது என தெரியவில்லை. இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த நிறுவனத்தை ஒட்டி மற்றொரு கார் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்பும் உள்ளது. அங்கு தீ பரவுவதற்கு முன்பு தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து விட்டனர்.

    Next Story
    ×