search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தி.மு.க.பிரமுகரை வீடு புகுந்து வெட்டியதால் பரபரப்பு: ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட  6 பேரை பிடித்து போலீசார் விசாரணை
    X

    கடலூர் அருகே தி.மு.க.பிரமுகரை வீடு புகுந்து வெட்டியதால் பரபரப்பு: ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை

    • முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி. இவரது கணவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.பிரமுகர். இவர்களுக்குள் அதே பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இதன் காரணமாக இருத்தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது . இது தொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் மதியழகன் தனது வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியதால் மதியழகன் கதவை திறந்தார். இதில் ஒரு நபர் திடீரென்று முகத்தில் துணி கொண்டு மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் கதறி துடித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மதியழகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணவர் புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 67), விஷ்ணு மூர்த்தி (வயது 57), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), அன்பழகன் (வயது 43), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதுச்சேரி ரவுடிகள் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×