search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மிச்சாங் புயல் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் கேட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 86 ஆயிரம் பேர் மனு
    X

    மிச்சாங் புயல் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் கேட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 86 ஆயிரம் பேர் மனு

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×